புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அரசு மருத்துவமனை கடந்த 1982இல் 36 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் நவீன பரிசோதனைகளுடன் உள்கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டு 108 படுக்கை வசதிகளுடன் ரூ.1கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவும் தொடங்கி மருத்துவமனைக்கு தேவையான 7 மருத்துவர், 15 செவிலியர்களும் முழுமையாக நியமனம் செய்யப்படுள்ளனர். இங்கு ஒரு பல் மருத்துவர் மற்றும் 11 மருத்துவமனை பணியாளர்கள் மட்டுமே தேவை உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று இரவு வாகன விபத்தில் தலையில் காயமடைந்த ஒரு இளைஞரை அப்பகுதி மக்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அந்த இளைஞருக்கு தையல் போட ஒரு செவிலியர் கூட வரவில்லை. செவிலியர்கள் மருத்துவர் அறையில் இருந்துள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் அவசரம் கருதி இளைஞரின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் அங்கிருந்த சாதாரண தினக்கூலி பணியாளர் ஜீவா என்ற பெண் இளைஞரின் தலை காயத்திற்கு தையல் போட்டுள்ளார். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கூறும் போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய மருத்துவமனை இது. ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்த பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 108இல் மிக அவசரமாக வரும் சில நோயர்களுக்கு இடையில் அவசர சிகிச்சை அளித்தால் மருத்துவக்கல்லூரி போகும் வரை உயிரிழப்பு இருக்காது என்று ஆலங்குடி மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் அவர்களை இறக்கி கூட பார்க்காமல் ஆம்புலன்ஸ்களிலேயே வைத்துக் கொண்டு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றி அனுப்ப அரை மணி நேரம் எழுதுவார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/pdu-hos-1-2026-01-29-16-08-35.jpg)
பல நேரங்களில் நீங்க எழுதும் நேரத்தில் நாங்கள் மருத்துவக்கல்லூரியே போயிடுவோமம்னு 108 ஊழியர்கள் வேகமாக போன சம்பவங்களும் உண்டு. இப்படி எந்த மருத்துவமும் பார்க்காமல் திருப்பி அனுப்புவதால் நோயர்கள் வருவதையே குறைத்துக் கொண்டனர். இதனால் புதிய பெட் வார்டுகள் பூட்டியே கிடக்கிறது. அரசாங்கம் தேவையான வசதிகளை செய்து கொடுக்கலாம் அதனை செயல்படுத்துவது அந்த மருத்துவமனை நிர்வாகம் தான். ஆனால் அவர்களின் அலட்சியம் மக்களை அச்சுறுத்துகிறது என்றனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை பொறுப்பு மருத்துவர் பெரியசாமி கூறும் போது, அந்த இளைஞரை கொண்டு வந்த போது மேலும் 2 அவசர சிகிச்சை நடந்துள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு இருந்துள்ளனர். அந்த நேரத்தில் தான் மருத்துவ உதவியாளராக இருந்த பெண் தையல் போட்டுள்ளார். இனிமேல் அவ்வாறு நடக்காமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ல் அழைத்துவரும் அவசர கேஸ்களை கூட சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்ஸ்களிலேயே வைத்து கொண்டே புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி எழுதி அனுப்புவதாக குற்றச்சாட்டு உள்ளதே? அதே போல எப்பவும் அவசர சிகிச்சைக்கு யார் வந்தாலும் உடனே மருத்துவக்கல்லூரிக்கு மாற்றி அனுப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்களே? நவீன வசதிகளும் முழுமையான மருத்துவர்களும் இருந்தே இப்படி நடக்கிறதே என்ற நமது கேள்விக்கு. இங்கு பார்க்கக் கூடிய சிகிச்சைகளை பார்த்து தான் அனுப்புகிறார்கள். இனிமேல் அப்படி நடக்காமல் முழுமையாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Follow Us