கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மகாபலிபுரத்திற்கு வரவழைத்து நேற்று (27.10.2025) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் தவெக சார்பில் கடந்த 18ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்படி கோடாங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு த.வெ.க. சார்பில் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது.
அதோடு வீடியோ காலில் பேசிய போது 'உங்களை நேரில் சந்திப்பேன்' என விஜய் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வரவழைத்து விஜய் சந்தித்திருந்தார். இருப்பினும் ரமேஷின் மனைவி சங்கவி மகாபலிபுரத்திற்கு செல்லவில்லை. அதே சமயம் இறந்தவரின் அக்கா பூமதி, அவருடைய கணவர் அர்ஜுனன் ஆகியோர் சென்றனர். இதனையடுத்து அவர்கள் சங்கவிக்கு தெரியாமல் சென்ற காரணத்தினாலும், விஜய் நேரில் வராத காரணத்தினாலும் த.வெ.க. சார்பில் செலுத்தப்பட்ட 20 லட்சம் ரூபாயை அதே வங்கிக் கணக்கிற்கு திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
இது தொடர்பாக ரமேஷின் மனைவி சங்கவி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், “என்னுடைய பெயர் சங்கவி. என் கணவர் பெயர் ரமேஷ். அவர் கடந்த மாதம் நடைபெற்ற விஜய் மீட்டிங்கில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார். அவர் இறந்ததற்காக ஆறுதல் தெரிவிப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் ஆறுதல் தெரிவித்து எங்களுக்கு நேரில் வந்து பணம் கொடுக்கிறேன் என்று தான் சொல்லியிருந்தார். நாங்கள் ஆறுதலைத் தான் பெரிதாக எதிர்பார்த்தோம். எங்களுக்குப் பணம் பெரியது கிடையாது. அவர்கள் கூப்பிட்டிருந்தார்கள் ஆனால் நாங்கள் இந்த கூட்டத்துக்குப் போகவில்லை. ஆனால் எங்களுக்கே தெரியாமல் எங்கள் பேரை 3 பேர் மிஸ்யூஸ் செய்து சொந்தக்காரர்கள் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
நாங்கள் யாரையுமே அனுப்பவில்லை. ஆனால் எங்கள் பேரை அவர்கள் தவறாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் ஆறுதலைத் தான் பெரிதாக நினைக்கிறோம். நாங்கள் இன்றைக்கு ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதனால் ஆறுதலைத் தான் பெரிதாக எதிர்பார்க்கிறோம். நான் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்தினால் என் கணவருடைய உயிரை யாராலும் திருப்பி கொடுக்க முடியாது. என் பேரை மிஸ்யூஸ் பண்ணி போயிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்த உடனே நான் பணத்தை ரிட்டர்ன் பண்ணிட்டு வந்துட்டேன். அவர் நேரில் வருவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவர் நேரில் வரவில்லை. நாங்கள் நேரில் போக விருப்பம் இல்லை” எனப் பேசினார்.
Follow Us