Why are you ashamed to accept Hindi? Pawan Kalyan's speech amid language controversy
இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. தற்போது நிகழ்ந்து வரும் மொழி சர்ச்சைக்கு மத்தியில், இந்தி மொழியை ஏற்க ஏன் வெட்கப்படுகிறீர்கள் என்று ஆந்திரா துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தி மொழியை ஏற்க ஏன் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள்?. நமது முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர், ஆனால் அவர் இந்தியை மொழியை ரசித்தார். மொழிகள் என்பது இதயங்களை இணைக்கும் வழிமுறைகள் என்று அவர் கூறுவார். எனவே வாருங்கள், அவருடைய தொலைன்நோக்கு பார்வை மூலம் நாம் இந்தி மொழியை பார்ப்போம். யாரும் திணிக்கவில்லை, யாரும் வெறுக்கவில்லை. இதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தி கட்டாயமான ஒன்றல்ல. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஒரு மொழி என்றால் அது இந்தி தான்.
வெளிநாட்டினர் நமது மொழியை கற்றுக்கொள்கிறார்கள். வேலைக்காக ஜெர்மனிக்கு நாம் செல்லும் போது ஜெர்மனி மொழியை கற்றுக்கொள்கிறோம், ஜப்பான் சென்றால் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்கிறோம். பிறகு ஏன், நமது சொந்த இந்தி மொழியை கற்றுக்கொள்ள நாம் பயப்படுகிறோம்? ஏன் பயம்? ஏன் தயக்கம்? நாம் வெறுப்பை விட்டுவிட வேண்டும். தயக்கத்தை விட்டுவிட வேண்டும். அரசியலைப் பொறுத்தவரை இந்தி நம் மீது திணிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். சொல்லுங்கள், இது எப்படி சரி ஆகும்?. நவீன மொழி என்று கூறி ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளும் போது ஏன் இந்தியை கற்றுக்கொள்ளக் கூடாது? இதில் என்ன தவறு இருக்கிறது?. அனைத்து இந்திய மொழிகளுக்கு பொதுவான மொழியாக இந்தி இருக்கிறது. இந்தி மொழியை கற்றுக்கொள்வதை மாநிலத்தின் பெருமை மற்றும் மொழி மோதல்களில் பார்வையில் பார்க்கக் கூடாது. மாநில எல்லைகளைத் தாண்டி எளிதில் அணுகக்கூடிய மற்றும் மதிப்புமிக்க தகவல் தொடர்பு வழிமுறையாகவும் அதை மக்கள் கருத வேண்டும்.
இந்தி மொழி அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. மேலும், தேசத்தை இணைக்கும் ஒரு கலாச்சார இணைப்பாக இந்தி இருக்கிறது. உலகம் முழுவதும் மக்கள் மொழியால் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில், இந்தி ஒரு ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறது. ஒரு மொழி, மாநிலங்களையும் கலாச்சாரங்களையும் கடந்து நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தியை நமது தேசிய மொழியாக நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். நமது தாய் மொழிகள், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் பிற, நமது வீடுகளுக்கும், அடையாளத்திற்கும் வேர்களுக்கும் இது தேவை. ஆனால், நாம் நமது வீடுகளை தாண்டி பரந்த சமூகத்திற்குள் நுழைந்தவுடன் நமக்கு ஒரு பொதுவான நூல் தேவை, அது தான் நமது தேசிய மொழி, இந்தி. நமது தாய் மொழி நமது தாயைப் போன்றது என்றால், இந்தியாவின் அனைத்து மொழியியல் குடும்பங்களையும் ஒரே புள்ளியின் கீழ் கொண்டு வரும் இந்தி நமது மூத்த தாய் போன்றது. பதற்றத்தை விட்டுவிடுங்கள், இந்தி மொழி மீதான வெறுப்பை விட்டுவிடுங்கள். அதைப் புரிந்துகொள்வோம், ஏற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.