Advertisment

திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்.பி.க்கள் மெளனம் ஏன்..? - கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி !

Eps (3)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  திருப்பூரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தொழில் துறையினர், விவசாயத் துறையினர், வியாபாரத் துறையினர் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடல் நடத்தினார். 

Advertisment

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம் திருப்பூர். இந்த நகரம் பலகோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது. பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நகரம் இது. இந்த பகுதிக்கு எங்கள்  ஊரில் இருந்துகூட பேருந்துகளில் ஆட்களை வேலைக்கு அழைத்து வருகிறார்கள்.நீங்கள் பேசாமலேயே இந்த பகுதியில் இருக்கும் பிரச்சினைகள் எனக்கு தெரியும்.

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பால் இங்கு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நான் அதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலமும் மத்திய அமைச்சர்கள் மூலமும் கோரிக்கைகள் வைத்திருக்கிறேன். இங்குள்ள தொழிலை மீட்டெடுக்க அரசின் சார்பில் என்னென்ன உதவிகள் செய்யவேண்டுமோ, அவற்றையெல்லாம் செய்யச் சொல்லி கோரிக்கை விடுத்துள்ளோம்.

நாங்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று சிலர் கூறினார்கள். அழுத்தம் கொடுக்கும் அளவில் எங்களுக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. நான் முதல்வராக இருந்தபோது பாஜக கூட்டணியில் இருந்தோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்துவதில் மத்திய அரசு காலதாமதம் செய்தது. பலமுறை நாங்கள் அவர்களிடம் பேசியும் தீர்வுகாண முடியவில்லை.

Advertisment

இந்த சூழலில் அதிமுகவின் 37 எம்.பி.க்கள் 22 நாட்கள் மக்களைவையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தோம். அதன் விளைவாக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது.

இப்போது திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழில்துறைக்கு சோதனையான நேரத்தில், இதனை காப்பாற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. நமது நாடாளுமன்ற உருப்பினர்கள் இங்குள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச வேண்டும். அவர்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இனியாவது இங்குள்ள தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  நாங்களும் கண்டிப்பாக அழுத்தம் கொடுப்போம். தொழில் செய்வது சாதாரண விஷயம் இல்லை.

 

இன்றைய தொழில் சார்ந்த பிரச்னைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளை எல்லாம் எங்கள் அரசு  ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம். மத்திய அரசிடமும் உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவோம்,.

 2020-2021 அதிமுக ஆட்சி காலத்தின் நிதிநிலையை விட 2024-25ல் 1 லட்சத்துக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வந்துள்ளது என்றாலும், இந்த ஆட்சியில்   எந்த புதிய திட்டங்களும் இல்லை. எங்கள் ஆட்சியில் நொய்யல் ஆற்றை சீரமைக்க 210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். மாநில அரசு நிதியிலேயே அத்திக்கடவு -அவினாசி திட்டத்தைக் கொண்டுவந்தோம். அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்காக 2வது கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்ததும். இந்த 2வது கட்ட திட்டத்தை நிறைவேற்றுவோம்.

சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு கொரோனா காலத்தில் பல உதவிகளை செய்தோம். இப்போது அவர்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.  அவர்கள் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் பற்றி பேசினீர்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை அமைக்க நிலம் எடுத்தால் நில உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நான் முதல்வராக இருந்தபோது 8 வழிச்சாலைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் கொண்டுவந்தோம் அப்போது 95 சதவீதம் பேர் நிலம் கொடுத்தார்கள் 5 சதவீதம் பேர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். கோர்ட்டுக்கு போனார்கள். அப்போது அத்திட்டத்தை எதிர்த்த திமுக, இப்போது அந்த திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறது.

சாலைக்காக நிலம் எடுப்பது அத்தனை எளிதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலும் வளர வேண்டும், விவசாயமும் வேண்டும். யாருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் இப்பிரச்னையை அதிமுக அரசு அமைந்தவுடன் அணுகும்…’’ என்று சொல்லியிருக்கிறார்.

admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe