பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் சீட் பெறுவதில் அதிமுகவை விட திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், தொகுதி மறுவரையறைக்குப் பின் கபிலர் மலை சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டு, புதிதாக பரமத்தி வேலூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. பரமத்தி வேலூரில் கொங்கு வெள்ளாள கவுண்டர் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கு அடுத்து வேட்டுவ கவுண்டர், வன்னியர், சோழிய வேளாளர், பட்டியல் சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். இத்தொகுதி, திமுகவைக் காட்டிலும் அதிமுகவுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருந்து வருகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பரமத்தி வேலூரில் திமுக மற்றும் அதிமுகவில் யாருக்கு சீட் கிடைக்கும்? என்பது குறித்து விசாரித்தோம்.  

Advertisment

அதில், ‘பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரைதான் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வேட்பாளராக களமிறக்கும். இரு திராவிட கட்சிகளின் முக்கிய பொறுப்புகளிலும் கவுண்டர் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். திமுகவில், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான கே.எஸ்.மூர்த்தி, 2016 சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூரில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதே ஜோரில் 2021 தேர்தலில் மீண்டும் களமிறங்கிய கே.எஸ்.மூர்த்தி தோல்வி அடைந்தார். கடந்த தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு 1000 ரூபாயும், சேலை, வேட்டி என அதிமுக தரப்பில் தூள் கிளப்பிய நிலையில், கே.எஸ்.மூர்த்தி தரப்பிலோ கரன்சி பாசனம் போதிய அளவுக்கு இல்லை என்கிறார்கள். இதுவும் கடந்த முறை அவர் தோல்வி அடைய முக்கிய காரணம் என்கிறார்கள்.  

Advertisment

param

தொகுதி முழுவதும் அறியப்பட்ட முகம் மற்றும் பழுத்த அனுபவசாலி என்பதால் பரமத்தி வேலூரில் கடைசியாக ஒருமுறை தனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கே.எஸ்.மூர்த்தி அறிவாலயத்தைப் பெரிதும் நம்புகிறார்.  முந்தைய அதிமுக ஆட்சியின்போது, அமைச்சர்களாக இருந்த தங்கமணி, காமராஜ் ஆகியோர் உதவியால் நெல் அரவை ஆலைகளை தொடங்கினார் என்றும், அதிமுக தங்கமணியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் கே.எஸ்.மூர்த்தி மீது பரபரப்பு புகார்கள் கிளம்பியதை அடுத்து, அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனது.  நாமக்கல் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் தயவால் கே.எஸ்.மூர்த்தி மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆனார். தற்போது சீட்டுக்காகவும் அவர்களையே பெரிதும் நம்பி இருக்கிறார்’ என்கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள்.  

இது ஒருபுறம் இருக்க, பரமத்தி வேலூரில் இந்தமுறை இளைஞர் ஒருவரை களத்தில் இறக்கவும் வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. 'நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான நவலடி ராஜாவுக்கு ஜாக்பாட் அடித்தாலும் ஆச்சர்யம் இல்லை. அமைச்சர் அன்பில் மகேஷூம், இவரும் கல்லூரியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவர் மூலமாக நவலடி ராஜா உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகியாக ஆனார்.

Advertisment

அதனால் இளம் தலைவருடனும் நல்ல நெருக்கத்தில்தான் இருக்கிறார். ஆதரவற்ற இல்லங்களுக்கு நல உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சமூகப்பணிகளை ஓசையின்றி செய்து வருகிறார். இளைஞரணி மாநாடு, சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் நூலகம் என கட்சிப் பணிகளிலும் நவலடி ராஜா ஆக்டிவ் ஆக வலம் வருகிறார். நவலடி ராஜாவின் தாத்தா காலத்தில் இருந்தே அவர்களுடைய குடும்பத்திற்கு என்று உள்ளூர் அளவில் செல்வாக்கு இருக்கிறது. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவரும் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.  

அதேபோல, நாமக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மதுரா செந்தில்குமார், ஆரம்பத்தில் பரமத்தி வேலூரில் களமிறங்கும் நோக்கில் புரமோஷன் வேலைகளைச் செய்து வந்தார்.  பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை மையம், மருத்துவமனை விரிவாக்கம் மற்றும் இந்த தொகுதியில் சில ஒன்றியங்களில் கூட்டுக் குடிநீர் ஆகிய திட்டங்கள் வருவதற்கு மதுரா செந்திலின் பங்கு முக்கியமானது. அவர் மீது சில புகார்கள் எழுந்ததால் திடீரென்று மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். ஆனாலும், மதுரா செந்திலின் பெயரும் அறிவாலயத்தின் ரேடாரில் இருக்கிறது என்கிறார்கள்.

திமுகவில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்பாளரான மகிழ் பிரபாகரன், கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவிற்கு 500 மோட்டார் சைக்கிள்களில் பேரணி நடத்தியது கட்சிக்குள் கவனம் பெற்றுள்ளது. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மகிழ் பிரபாகரன், அருந்ததி சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சொந்த செலவில் கோயில்கள் கட்டிக் கொடுத்ததன் மூலம் அந்த சமூக மக்களிடையே நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். மாணவர்களுக்குக் கல்வி உதவி, திமுக முன்னோடிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, மருத்துவ நிதி உதவி போன்ற அறப்பணிகள் மூலம் உள்ளூர் அளவில் அறியப்பட்ட முகமாகவும் இருக்கிறார். இதனால், மகிழ் பிரபாகரனின் பெயரும் வேட்பாளர் பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் பரமத்தி வேலூர் தொகுதி மக்கள்.

இவர்கள் தவிர, 2011ல் அதிமுக கூட்டணி சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, இந்தமுறை திமுக கூட்டணி சார்பில் பரமத்தி வேலூரில் களம் இறக்கப்படலாம் என்ற பேச்சும் இருக்கிறது. அதேநேரம், திருச்செங்கோடு எம்எல்ஏ ஆக உள்ள கொ.ம.தே.க. ஈஸ்வரன், இந்தமுறை பரமத்தி வேலூர் பக்கம் நகரவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள். அதிமுக நிலவரம் குறித்து விசாரித்தோம், ‘பரமத்தி வேலூர் சிட்டிங் எம்எல்ஏவான அதிமுகவின் சேகர், கட்சிக்காரர்களின் வீடுகளில் நடக்கும் திருமணம் முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளுக்கும் தவறாமல் சென்று வருகிறார். கட்சியினர் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது.  

இவருடைய தம்பி ராஜா, முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ரொம்பவே நெருக்கம். சேகருக்கு அரசியல் முகம் என்றால், அவரை பின்னின்று இயக்குவது எல்லாமே ராஜாதான். வரும் தேர்தலில் மீண்டும் ‘சிட்டிங்’ சேகருக்குதான் சீட் என்று அடித்துச் சொல்கிறார்கள் ர.ர.க்கள். இவர் தவிர, கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு இறுதி வரை டஃப் கொடுத்த அதிமுகவின் வர்த்தகர் அணி அமைப்பாளர் ‘ராஹா’ தமிழ்மணியும் பரமத்தி வேலூர் தேர்தல் களத்தில் இருக்கிறார்.

பரமத்தி வேலூரில் சீட் கிடைக்காத பட்சத்தில் திருச்செங்கோடு தொகுதியில் களமிறங்கவும் ‘ராஹா’ தமிழ்மணி தயாராக இருக்கிறார்.  கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லுக்கு பரப்புரைக்கு வந்திருந்தபோது 200 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைத்ததன் மூலம் திடீரென்று கவனம் ஈர்த்தார், சாப்ட்வேர் இன்ஜினியரான கண்ணன் ராசப்பன். அவரும் சீட் எதிர்பார்க்கிறார்’  என்கிறார்கள் இலைக்கட்சியினர். பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை திமுக, அதிமுக சார்பில் யார் களம் இறங்கினாலும், போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.