பா.ம.க.வில்  அக்கட்சியினர் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கும்பகோணத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (10.07.2025) நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''ஐந்து வயசு குழந்தை மாதிரி நான் இருக்கேனாம். அப்படியென்றால் அந்த குழந்தை தான் மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவர் ஆக்கியது.  இப்பொழுது சொல்கிறேன் என் பெயரை யாரும் போடக்கூடாது. இன்சியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய பெயரை போடக்கூடாது. ஏனென்றால் என் பேச்சைக் கேட்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. உங்களை செயல் தலைவர் என்று தான் சொல்கிறோம். மக்களை சென்று பாருங்கள். மக்களுடன் மக்களாக வாழுங்கள். மக்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். ஊர் ஊராக போங்கள்'' என்றார்.

இந்நிலையில் இன்று (11/07/2025)கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'நேற்று முன் தினம் எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டிக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.