மதுரை மாவட்டம் சோழவந்தன் அருகே உள்ளது திருவாலவாயா நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் அருகே உள்ள காலியிடமானது நத்தம் புறம்போக்கு என்று அரசு பதிவேட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடம் என்று பள்ளிவாசல் தரப்பில் கூறப்பட்டது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசல் அருகே சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டது.
அதே சமயம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இருக்கும்போது வேலி அமைக்கக்கூடாது எனவே அதை அகற்ற வேண்டும் எனக் கூறி வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்குச் சென்று வேலியை அகற்ற முயன்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் வேலியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வேலியை அகற்ற விடாமல் தடுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்தவர்களை இறக்கி விடும் வரை வாகனத்தைச் செல்ல விடமாட்டோம் எனக் கூறி அங்கிருந்த பெண்கள் போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கைது செய்தவர்களை வேனில் இருந்து போலீசார் இறக்கி விட்டனர். அதே சமயம் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதன் பிறகே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அதிகாரிகள் தரப்பில் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால் திருவாலவாய் நல்லூர் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.