தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “அரசியலில் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் எனது ரோல் மாடல். நான் அரசியலுக்கு வந்ததால் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.இதன் காரணமாகத் திரைப்பட தயாரிப்பாளர் பாதிக்கப்படும் நிலையை அறிந்து வருந்துகிறேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/31/tvk-vijay-our-stalin-img-1-2026-01-31-14-05-37.jpg)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நான் எதிர்பாராத ஒன்று ஆகும். இந்த சம்பவம் இன்று வரை பாதித்து வருகிறது. அரசியலுக்கு வர வேண்டும் என நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்தேன். அதே சமயம் 33 ஆண்டுக்கால திரை வாழ்க்கையை விட்டு அரசியலுக்கு வருவது எளிதான ஒன்று அல்ல. வரும் சட்டமன்ற தேர்தலில் கிங்மேக்கர் ஆக விரும்பவில்லை. கிங் ஆகவே இருப்பேன். அரசியலில் இடதுசாரியா, வலது சாரியா என்பதைத் தாண்டி மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே எனது அரசியல் ஆகும்” எனத் தெரிவித்தார்.
Follow Us