பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று (08/07/2025) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமதாஸின் மகளும் முகுந்தனின் தாயுமான ஸ்ரீகாந்திமதி மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய வகையில் கூட்டணி அமைக்க ராமதாஸ்க்கு அதிகாரம்; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கலங்கத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிற்கு முழு அதிகாரம்;  தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்குழுவில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக அன்புமணிக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

Advertisment
A4340
Who is the leader? - Ramadoss, Anbumani knock on the door of the Election Commission Photograph: (pmk)

செயற்குழுவில் பேசிய ராமதாஸ், ''என் வலியை அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். இன்னும் வராத 95 விழுக்காடு சொந்தங்கள் அங்கேயே வீட்டிலேயே இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வலி அவர்களுக்கு தெரியும். தேர்தலில் போட்டியிட ஏ, பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்கே உள்ளது. கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பாமக செயற்குழு எனக்கே வழங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஆயத்தமாக இருங்கள்' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியின் டெல்லி பயணத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 'கட்சியினுடைய நிலைப்பாடுகள் மற்றும் சட்டவிதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்' என தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதற்கு முன்பாகவே ராமதாஸ் தரப்பினர் இருவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தேர்தல் ஆணைய அதிகாரிகளை மீண்டும் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. 'கட்சியின் தலைவர் நான் தான்' என ராமதாஸ் கடிதம் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் 'பாமகவின் கட்சி விதிகளின்படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்தான் தலைவர். 'அன்புமணி ராமதாஸ்' என தான் கையெழுத்திட்டு நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள். செயற்குழு கூட்டம் கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் ராமதாஸ் தரப்பினர் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னர் செயற்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பு வெளியிட்டதால் நேற்று நடைபெற்ற செயற்குழு செல்லாது' என அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.