'அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்?; நீதி விசாரணை விதிக்க நேரிடும்'- கேள்விகளை அடுக்கிய நீதிமன்றம்

புதுப்பிக்கப்பட்டது
a4260

police Photograph: (police)

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதோடு, கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இறந்த இளைஞர் அஜித்தின் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷித் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்.பி சந்தீப் சிவகங்கை மாவட்ட எஸ்.பி கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (30-06-25) வழங்கறிஞர் மாரீஸ்குமார் முறையீடு செய்தார். அப்போது காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ‘கடந்த 4 ஆண்டுகளில்  24 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த நபர் என்ன தீவிரவாதியா?. ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம். அவ்வாறு இன்றி, ஒரு சாதாரண சந்தேக வழக்கில் அவரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை?. இதனை பாதிக்கப்பட்டோர் மனுவாக தாக்கல் செய்யுங்கள், விசாரணைக்கு எடுக்கிறோம்' என்று தெரிவித்தது.

தொடர்ந்து முழுமையான விவரங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் 'திமுகவைச் சேர்ந்த சேங்கைமாறன், பஞ்சாயத்து தலைவரான வேங்கைமாறனின் மனைவி, திமுக செயலாளர் மகேந்திரன், மானா மதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித் வீட்டிற்கு சென்று 50 லட்சம் தருவதாக அவருடைய பெற்றோரிடம் சமரசம் பேசியுள்ளனர். விசாரணையில் அஜித் தப்பி ஓட முயன்றது போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக காவல்துறையினர் நாடகமாடி கட்டுக்கதை விட்டுள்ளனர் .தாக்குதலில் ஈடுபட்ட காவலர் கண்ணன் என்பவர் மானாமதுரை டிஎஸ்பியின் சிறப்புப்படையை சேர்ந்தவர். அவர் திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறலாகவே பார்க்கப்படும்.' என வழக்கறிஞர் ஹென்றி வாதத்தை முன் வைத்தார்.

வழக்கறிஞர் மாரீஸ்குமார் வைத்த வாதத்தில் 'காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? தற்போது வரை கூட உடல் கூறாய்வு அறிக்கையை அஜித்தின் தாயாரிடமும் சகோதரிடமும் காவல்துறையினர் வழங்கவில்லை' என வாதத்தை வைத்தார். மேலும் அஜித்தை போலீசார் சுற்றி நின்று தாக்குவதை  நபர் ஒருவர் ஜன்னல் வழியாக எடுத்த காட்சிகள் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட்டது.  

இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் கேள்வி சரமாரியாக எழுப்பியுள்ளார்.' அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். அஜித்தை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை. இளைஞரை விசாரிக்க வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்.பி-ஐ உடனடியாக மாற்றுவதற்கான காரணம் என்ன? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை. சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? ஏன் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறீர்கள். 

யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்பிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் இதில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதி, வழக்கை பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

dmk lock up madurai police thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe