கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரைத் தாண்டி எதிர் திசையில் சென்று அந்த வழியில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த 2 கார்களின் மீது மோதியதால் கார்களில் பயணம் செய்த 9 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து போக்குவரத்து ஊழியர் குமரவேல் என்பவர் கூறுகையில், ‘தற்போது பேருந்துகளில் சக்கரம் மிகவும் மோசமான சூழ்நிலையே உள்ளது. 3 மாதத்திற்கு ஒருமுறை பிரேக் லைனிங் மாற்ற வேண்டும். ஆனால் கடைசிவரை அது சுக்கு நூறாகும் வரை பிரேக்கை மாற்ற மாட்டார்கள். இதனால் பேருந்தில் பிரேக் பிடிக்கும் போது சத்தம் வருவதை சாலையில் செல்லும் போதே பார்க்கமுடியும்,  இது குறித்து கேட்டால் இஷ்டம் இருந்தால் வண்டியை எடுத்துட்டு போ இல்லன்னா பணி இல்லை என்கிறார்கள். இந்த சூழலில் தான் ஓட்டுனர்கள் பேருந்தை இயக்கி வருகிறார்கள். எனவே இந்த விபத்திற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்த டயர் தான் காரணம். புதிய பேருந்துகள் வாங்கப்படுகிறது. பணிமனைகளில் பேருந்துகளுக்கு சரியான பராமறிப்பு இல்லை. ஓடுகிறவரை ஓடட்டும் என்றே செயல்படுத்துகிறார்கள்’ என்கிறார்.

Advertisment

போக்குவரத்து துறை ஆய்வாளர் விமலாவிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் விருதாச்சலத்தில் பணியில் இருந்த போது இதேபோல் ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகளை நேரில் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதற்கு முக்கிய காரணம் சென்டர் மீடியம் தான் என்றும் கூறினார். மேலும் அவர், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதாமல் இருக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது போன்ற டயர் வெடிக்கும் போதும், தூக்க கலக்கத்தில் கார் அல்லது பேருந்து விபத்து ஏற்படும் போது சென்டர் மீடியனை தாண்டி செல்லாத வகையில் சென்டர் மீடியனை உயர்த்த வேண்டும். தற்போது 1 அடி வரை மட்டுமே சென்டர் மீடியன் உள்ளது. தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்படும் போதும் அல்லது டயர் வீக்கால் வெடித்தால் வாகனங்கள் சென்டர் மில்லியன் தாண்டி சென்று மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்துகிறது. சென்டர் மீடியன் குறைந்த பட்சம் 4 அடி  உயரம் இருந்தால் வாகனங்கள் பாய்ந்து சென்று இதுபோல் அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தாது.  விபத்து ஏற்படும் போது மோதி நின்று விடும். அல்லது சாய்துவிடும் இதனால் உயிர் இழப்புகள் அதிகம் இருக்காது.

இது குறித்து நகாய் அதிகாரிகளிடம் பலமுறை அவர் டயர் அளவுக்காவது சென்டர் மீடியனை உயர்த்துங்கள் என முறையிட்டபோது அதற்கு நகாய் அதிகாரிகள் அதற்கு நாம்ஸ் இல்லை எனவும் இது போன்ற விபத்து எப்பயாவது ஒருமுறை தானே நடக்கிறது அதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என அலட்சிய பதிலையே கூறியுள்ளனர். அலுத்து போன அவர் அங்கே இருந்து பணி மாறுதல் பெற்றுள்ளதாகவும் வருத்தத்துடன் கூறுகிறார். கடலூர் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரி செல்வம், ‘சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்தின் டயர் வெடித்து சிதைந்து கம்பிகள் அனைத்தும் தெரிவதால் உடனடியாக என்ன காரணம் எனத் தெரியவில்லை. இது குறித்து வல்லுனர்கள் குழு ஆய்வு செய்வதாகாவும் அதன் பிறகு தான் டயர் மோசமாக  இருந்ததா என்று தெரியவரும் என்றார்.

Advertisment