அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று(11/07/2025) விழுப்புரத்தில் திறந்தவெளி வேனில் நின்றபடி உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ''முன்பெல்லாம் பத்து ரூபாய்க்கு மதிப்பு இல்லாமல் இருந்தது. பத்து ரூபாய் என்பது சாதாரணம். ஆனால் இப்பொழுது பத்து ரூபாய்க்கு மதிப்பு வந்து விட்டது. யாரால் மதிப்பு வந்தது? செந்தில்பாலாஜியால் பத்து ரூபாய்க்கு மதிப்பு வந்துவிட்டது.

பத்து ரூபாய் என்றாலே யார் பெயர் ஞாபகத்துக்கு வருகிறது? செந்தில்பாலாஜி பெயர் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏழை எளியோர் ஏதோ கஷ்டப்பட்டு காலையிலிருந்து மாலை வரை உழைத்த பிறகு கடையில் போய் உடம்பு வலியை நீக்குவதற்காக குடிக்கிறார்கள். அதில் பத்து ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள். இந்த ஆட்சி தேவையா? ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஆட்சி திமுக ஆட்சி. ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 15 கோடி வருது. மாதத்திற்கு 450 கோடி, வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளை அடித்த அரசாங்கம் திமுக அரசாங்கம். அதுதான் டாஸ்மாக் ஊழல்.

அதனால்தான் ஆயிரம் கோடி ஊழல் என மத்திய அமலாக்கத்துறை அங்க போய் ரெய்டு செய்துதது. தடையாணை வாங்கி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிற்கிறது. விரைவாக அந்த தடையாணை நீக்கப்பட்ட பிறகு இந்த அமலாக்கதுறையின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதில் பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டப் போகுது. அரசாங்க பணத்தை கொள்ளையடித்து சாப்பிடுவதால் தான் அரசாங்கத்தின் வருமானம் இல்லை. அரசாங்கத்திற்கு வர வேண்டிய வருமானம் ஒரு குடும்பத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே இந்த நாட்டிற்கு ஒரு குடும்பம் முக்கியமா? என்பதை நம் உணர வேண்டும். ஒரு குடும்பம் இந்த நாட்டை சுரண்டி பிழைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முடிவு கட்டுகின்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்'' என்றார்.