காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாக்குதலை நிறுத்தப்படுவதாக அறிவித்தது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.
இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை அமெரிக்கா தான் முடிவுக்கு கொண்டு வந்தது என அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் பேட்டியளித்ததால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த போது, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அதிபர் டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தினார். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் மிகப்பெரிய பொது அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். நீங்கள் பார்த்தபடி, இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். எந்தவொரு சந்திப்பும் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட மற்றவர்களின் கருத்துக்களை அவர் கேலி செய்துள்ளார். அதிபர் நகர விரும்புகிறார், மேலும் இந்த போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்” என்று கூறினார்.