கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடலானது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் மு.க.முத்துவின் உயிர் பிரிந்ததாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.
கலைஞர் -பத்மாவதி தாயாரின் மூத்த மகன் மு.க.முத்து 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்தார். அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் மு.க.முத்து பாடல்களையும் பாடியுள்ளார். தேவா இசையமைத்த 'மாட்டுத்தாவணி' என்ற படத்தில் நாட்டுப்புறப் பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மு.க.முத்து மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் உயிரிழந்த மு.க.முத்துவின் உடலை கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என மு.க.முத்துவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்த நிலையில் அவரது உடல் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு மு.க.முத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.