திண்டுக்கல் வத்தலகுண்டுவில் உசிலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் உச்சப்பட்டியைச் சேர்ந்த 50 வயதான இளங்கோ ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், 5 ஆம் தேதி அன்று, அந்த பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள், ஹோட்டலுக்கு சென்று 10 பரோட்டா, 8 இட்லி, 2 தோசை, சிக்கன் மற்றும் ஆம்லெட் உள்ளிட்டவற்றை பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்.

Advertisment

அதன்பிறகு சிறிது நேரத்திலேயே மீண்டும் இளங்கோவின் ஹோட்டலுக்கு வந்த அந்த நபர்கள் பார்சல் வாங்கியதில் 10 பரோட்டாவிற்கு பதிலாக 8 பரோட்டா மட்டும் உள்ளது. மீதி 2 பரோட்டா எங்கே என ஹோட்டல் உரிமையாளர் இளங்கோவிடம் கேட்டுள்ளனர். தவறு நடந்து விட்டது என்று கூறிய இளங்கோ உடனடியாக இரண்டு பரோட்டாவை கட்டிக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

Advertisment

இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த ஹோட்டலுக்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். மேலும், ஹோட்டல் உரிமையாளர் இளங்கோவிடம் 'பத்து பரோட்டா பார்சல் கேட்டா,8 பரோட்டாதான் தர்ற, மீதி ரெண்டு பரோட்டா எங்கடா' என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அதற்கு இளங்கோ மீதி ரெண்டு பரோட்டாவை கொடுத்து அனுப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அதனையெல்லாம் காதில் வாங்காத அந்த கும்பல் கலாட்டாவில் ஈடுபட்டிருக்கிறது. மேலும் ஹோட்டல் உரிமையாளர் இளங்கோ மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில் ஹோட்டலில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்ததை பார்த்த அந்த கும்பல், சற்று அதில் இருந்து விலகி, சிசிடிவி இல்லாத இடத்தில் இருந்த நாற்காலி, டேபிள் மற்றும் ஹோட்டலில் இருந்த பொருட்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ஹோட்டலில் அத்துமீறி நுழைந்த அந்த கும்பல் கடையைத் துவம்சம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இதனிடையே ஹோட்டல் உரிமையாளர் இளங்கோ வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.