உத்தரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின்(22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு வீட்டிலுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, நீதிமன்ற உத்தரவின் பேரில்  இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்கள் ஆரம்பத்தில் வேலை நிமித்தமாக சூரத்திற்குச் சென்றனர். அங்கு சச்சின் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இருப்பினும் ஒரு மாதம் கழித்து, அவர்கள் கான்பூருக்குக் குடிபெயர்ந்து ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். அங்கு சச்சின ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டத் தொடங்கினார்.  

Advertisment

இவ்வாறு, சிறிது நாட்கள் கடந்த நிலையில் சந்தேகம் காரணமாக அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஸ்வேதாவின் வங்கிக் கணக்கில் அடிக்கடி பணம் டெபாசிட் செய்யப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அந்தப் பணம் தனது பாட்டியிடம் இருந்து வருவதாக ஸ்வேதா பதிலளித்தார். இருப்பினும், சச்சினுக்கு தங்கள் வீட்டிற்கு எதிரே வசிக்கும் மாணவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.  

Advertisment

இதனால்,கடந்த வெள்ளிக்கிழமை (16-01-26) அன்று, தனது மனைவியை சோதிக்க சச்சின் ஒரு திட்டத்தைத் தீட்டினார். அதன்படி தனது மனைவியிடம், தான் நண்பர்களுடன் ஒரு விருந்தில் இருப்பதாகவும், இன்று இரவு வீட்டிற்கு வரமாட்டேன் என்றும் பொய் கூறினார். இந்நிலையில்,  எதிர்பாராத விதமாக அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, அறை திறந்திருப்பதையும், தனது மனைவி அக்கம் பக்கத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் இருப்பதையும் கண்டதாகக் கூறப்படுகிறது.

696
'Where does the money come from for your bank' - Husband who killed his wife surrenders to police Photograph: (police)
Advertisment

இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவசர உதவி எண்ணான 112-க்கு அழைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர்கள் தாங்கள் அங்கு அமர்ந்திருந்ததாகக் கூறினர். அதன் பிறகு காவல் அதிகாரிகள் தம்பதியினருக்கு அறிவுரை கூறி, தங்கள் பிரச்சனைகளைத் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  

இருந்த போதிலும், அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் இந்த வாக்குவாதம் மேலும் முற்றியது. தன்னைக் கொன்றாலும் மற்ற ஆண்களுடன் தான் தங்குவேன் என்று ஸ்வேதா சொன்னதால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற, சச்சின் அவளது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

கொலைக்குப் பிறகு, சச்சின் கடிகார கோபுரம் (கண்டாகர்) பகுதிக்குத் தப்பிச் சென்று பல மணி நேரம் அங்கு அமர்ந்திருந்தார். பின்பு, காவல் நிலையம் சென்று அங்கு நடந்தவற்றைக் கூறி  சரணடைந்தார். விசாரணையில், "நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். எங்களுக்கு வேறு யாரும் இல்லை, நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டோம். என் மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால், என் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டேன். அவளது உடல் வீட்டில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் கிடக்கிறது. இப்போது அவளுக்கும் யாரும் இல்லை, எனக்கும் யாரும் இல்லை. அதனால் தான் நான் சரணடைய காவல் நிலையத்திற்கு வந்தேன்," என்று சச்சின் கூறினார்.

சச்சினை காவலில் எடுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஸ்வேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.