'Where did this pillar suddenly come from in a 2000-year-old temple?' - Temple officials' sensational argument Photograph: (madurai)
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி (01.12.2025) உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 04ஆம் தேதி (04.12.2025), திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத் தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (12.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், “இந்த வழக்கு தொடர்பான மனுவானது பொதுநல மனுவைப் போல் தீர்மானிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனுதாரருடைய மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட இயலாது. 75 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதில் எந்தவித பிரச்சனையும் இதுவரைக்கும் இருந்ததில்லை.
கடந்த 1912ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக இருமுறை மத பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சொத்துரிமை குறித்த வழக்குகள் நடைபெற்றுள்ளது. 1923ஆம் ஆண்டு உரிமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கூட தீபமேற்றுவது தொடர்பாக எதுவும் அதில் கூறப்படவில்லை. இதனிடையே 1931ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு பிரிவியூ கவுன்சிலுக்கு இந்த மனு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2 முறை இரு தரப்பினர்களும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போதும் தீர்ப்புகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து 1994ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் இந்த பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது ஒரு பொதுநல வழக்கில் தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதிலும் கூட உச்சி பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளது. ஆனால் தனி நீதிபதி இதை எதையுமே கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல என்று எப்படி கூறுவீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, 'பிரிட்டிஷ் காலத்தில் மலைகளை அளப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சர்வே தூண் தான் அது' என பதிலளிக்கப்பட்டது. அதேபோல கோயில் நிர்வாகம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளார். முழுக்க முழுக்க மனுதாரருக்கு சாதகமான விவரங்களை மட்டுமே தனி நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார். தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்பதுதான் இப்போது பிரச்சனை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல. 175 ஆண்டுகளாக அந்த கல்லில் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. திருப்பரங்குன்றம் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. திடீரென இந்த தூண் எங்கிருந்து வந்தது? பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது' என வாதத்தை வைத்தது.
தொடர்ந்து இந்த வழக்கில் பிரதி வாதங்கள் இருப்பதால் வழக்கானது திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Follow Us