'கர்நாடகத்தில் செப் 22 ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. தமிழக ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி ஞானம் எப்போது தான் பிறக்கும்?' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்ம், 'கர்நாடகத்தில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
சமூகநீதியை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இப்போது இரண்டாவது முறையாக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும்; மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று போலி சமூகநீதிப் புலிகள் கூறி வரும் நிலையில், மத்திய அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் கூட, எங்கள் மாநிலம் சார்ந்த சமூக, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களைத் திரட்ட இக்கணக்கெடுப்பு அவசியம் என்று சித்தராமைய்யா கூறியிருப்பது பலரும் அறிய வேண்டிய பாடமாகும்.
செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கும் இந்தக் கணக்கெடுப்பு அக்டோபர் 7-ஆம் தேதி வரை 15 நாள்கள் நடைபெறும். அதில் கிடைக்கும் விவரங்கள் தொகுக்கப்பட்டு அக்டோபர் மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் அடுத்த ஆண்டுக்கான கர்நாடக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு இக்கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்பில் 1.65 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். கர்நாடகத்தில் உள்ள 7 கோடி மக்களின் விவரங்களும் இந்தக் கணக்கெடுப்பில் திரட்டப்படும். கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் மக்களிடம் மொத்தம் 54 வினாக்கள் கேட்கப்பட்ட நிலையில், இப்போது இன்னும் கூடுதல் கேள்விகள் கேட்கப்படவுள்ளன. வினாக்களின் பட்டியலை சமூகநீதி வல்லுநர் குழுவினர் தயாரித்து வருகின்றனர்.
இந்த விவரங்களையெல்லாம் அறியும் போது தான் தமிழக ஆட்சியாளர்கள் போலி சமூகநீதிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தமிழக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்பது தெரிகிறது. கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவைகள் என்னென்ன உள்ளனவோ, அவற்றுக்கும் மேலாகவே தமிழகத்திற்கான தேவைகள் உள்ளன. கணக்கெடுப்பு நடத்துவதற்கான கட்டமைப்புகளும், வசதிகளும் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளன. ஆனாலும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தடுப்பது எது?
தமிழ்நாட்டில் யாருக்கும் சமூகநீதி கிடைத்து விடக்கூடாது என்ற வன்மமும், சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வெளியானால் தமிழக மக்களை ஏமாற்றி அடக்கியாள முடியாது என்ற அச்சமும் தான் இதற்குக் காரணம் ஆகும். கர்நாடகத்தில் இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற யோசனையை அரசிடம் முன்வைத்து, அரசின் அனுமதி பெற்று, நடத்தப்போவது அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான். ஆனால், தமிழ்நாட்டிலும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ற அமைப்பு இருக்கிறது. அது எதற்காக இருக்கிறது என்பது அதற்கும் தெரியவில்லை, அதை அமைத்த ஆட்சியாளர்களுக்கும் புரியவில்லை. இவர்கள் நடத்தும் கூத்துகளால் தமிழகத்தில் சமூகநீதி உயிரிழந்து கொண்டிருக்கிறது.
எப்படி இருந்தாலும் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அணி வெற்றி பெறப் போவதில்லை. சமூகநீதிக்கு துரோகம் செய்து விட்டு ஆட்சியை இழந்தார் என்ற அவப்பெயருக்கு அவர் ஆளாகிவிடக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.