தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தலைமையில் கூட்டணிகள் உறுதியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் என்பதில் உறுதியாக உள்ளது.
இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் அடுத்தகட்ட தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். அதன்படி தற்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வரும் விஜய், அடுத்ததாக வேட்பாளர் தேர்விற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா நான்கு வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக விருப்ப மனுத் தாக்கல் கடந்த 20ஆம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட நபர்களுடன் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் விஜய் நேரடியாக நேர்காணல் நடத்தவுள்ளார். அதன்படி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளான்ர். இதனையடுத்து, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தித் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அதே சமயம் இந்த வேட்பாளர் தேர்வுப் பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us