சென்னை தியாகராயநகர் தொகுதியின் வாக்குச்சாவடிக்குட்பட்ட திமுகவினர் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக சுமார் 13000 அதிமுகவினருடைய பெயர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கியதாகக் கூறி அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “கடந்த 1998ஆம் ஆண்டு தி நகர் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 9 ஆயிரம் வாக்குகள் இருந்தது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டில் 36 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளது. 

Advertisment

எனவே மக்கள் தொகைக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. குறிப்பாக தி.நகர் தொகுதியில் உள்ள அதிமுக ஆதரவாளர்கள் 13 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாக தி. நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து வெளியிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (24.10.2025)  காலை விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வாதிடுகையில், “நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பீகாரைப் போன்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் (நவம்பர் மாதம் முதல் வாரம்) முதல் துவங்கப்பட உள்ளது. அப்போது இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “பீகார் திறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே இந்த வழக்கை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.