இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி அரசிதழ் அறிவிப்பு மூலம் அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை குடியிருப்புகளை பட்டியலிடவும், 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. அதோடு இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக அமையும். தரவுகளைச் சேகரிக்க மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும் மற்றும் பொதுமக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும்வசதியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான 4 டிஜிட்டல் தளங்களை டெல்லியில் நேற்று (05.03.2026) அறிமுகம் செய்தார்.
அத்துடன் கணக்கெடுப்புக்கான பிரகதி (பெண்), விகாஸ் (ஆண்) என்ற சின்னங்களையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூலை 17ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட 30ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990இன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடைசியாக 2011இல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனையடுத்து 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருந்தது. ஆனால், நாடு முழுவதும் கொவிட் - 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/tn-sec-2026-03-06-10-54-44.jpg)