2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் கூட்டணி, சுற்றுப்பயணம் என தற்போதே அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற அதிமுக சார்பிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்து பங்கேற்றார். 

Advertisment

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜியிடம் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நாங்கள் கூட்டணி வைத்திருக்கும் பாஜக இந்த பாரதத்தை ஆளும் கட்சி. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற கட்சி. இந்த நாட்டை பாதுகாக்கும் தலைவன் நரேந்திர மோடி. இந்த நாட்டை பாதுக்காக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்த தலைவர்களை கொண்ட பாஜகவோடு இந்த நாட்டின் தேசபக்தன், தெய்வீக பக்தன், தேசத்தை பாதுகாக்கும் தொண்டன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. இதுதான் அற்புதமான கூட்டணி. ஆன்மீக பலம் பொருந்திய கூட்டணி. இதில் குழப்பத்தை உருவாக்கி குளிர்காய நினைத்தார்கள் முடியவில்லை. ஐயையோ பாஜகவுடன் கூட்டணி வைத்து விட்டார்கள் என சிறுபான்மை மக்களை தூண்டிவிடலாமா, எடப்பாடி மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார் என விமர்சிக்கின்றனர்.

Advertisment

யார் அடிமை? எப்போது எதிர்க்க வேண்டுமோ அப்போது எதிர்க்கும் வல்லமை படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்காக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் வளர்ச்சிக்காக இணக்கமாக சென்றார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தார். மத்திய அரசுக்கு இணக்கமான சென்று காரியம் சாதித்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அள்ளி கொண்டு வந்தார். பாஜகவை எதிர்த்து பேசுகிறீர்களே முழுமையாக எதிர்ப்பீர்களா? டெல்லி சென்றால் உறவு சென்னைக்கு வந்தால் பகை போல் நடிப்பது. இப்படி வேஷம் போடும் வேலை இனி தமிழகத்தில் நடக்காது'' என்றார்.