2026 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். தேர்தல் பரப்புரைகள், சுற்றுப்பயணங்கள் என மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த கூட்டமானது நடைபெற இருக்கிறது. முதல் நாளான இன்று சென்னை மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை கமல்ஹாசன் சந்தித்து ஆலோசித்துள்ளார். இதில் கமல்ஹாசன் பேசுகையில், 'வாழும் காமராஜர் நான் இல்லை. என்னுடைய இயற்பெயர் பார்த்தசாரதி. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி அவருடைய ஆசையைக் கூறினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். அரசியல் சுரண்டலுக்கு நிகரானது அரசியல் வேண்டாம் என்பது. நமது அரசியலில் தேசியமும் இருக்க வேண்டும் தேசமும் இருக்க வேண்டும்.
இந்தியாவை இடது, வலது என்று பிரிக்கக் கூடாது.எனக்கு பிறகும் நமது கட்சியில் தலைவர்கள் உருவாக வேண்டும். எனக்கு பிறகு கட்சி இல்லை என்று அழிந்து விடக்கூடாது. திமுகவில் நாம் சேர்ந்து விட்டோம் எனக் கூறுகிறார்கள். திமுக நீதிக்கட்சியில் இருந்து வந்தது நம்முடைய கட்சி பெயரிலும் நீதி உள்ளது. இது கூட்டணி கிடையாது அதற்கு மேல் புனிதமானது' என பேசியுள்ளார்.