சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பினர்.
''டிஆர்பி ரெட்டுக்காக விஜய்யை ஊடகங்கள் காட்டுகிறது. என்னங்க இருக்கிறது? என்ன செய்தார்கள் தவெக கட்சியினர். சொல்லுங்க பார்க்கலாம். இன்று அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி. மத்திய அரசில் இருந்து திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியதன் மூலமாக தமிழகம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என நாங்கள் பளிச்சென்று சொல்றோம். விஜய்க்கு ரசிகர் கூட்டம் வரத்தான் செய்யும். அவர் சிறந்த நடிகர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான். மக்களுக்கு சேவை செய்வது என்றால் நாங்கள் தான். நாங்கள் தான் இதுவரைக்கும் மக்களுக்கு குரல் கொடுத்துட்டு இருக்கிறோம். இந்த ஆட்சியை எதிர்த்து கூட பேச முடியவில்லை. அதுவரைக்கும் திரைப்படத்தில் நடிச்சிட்டு தான் இருந்தார் விஜய். இப்போது தான் வெளியில் வந்திருக்கிறார்.
நான் இந்த பொதுவாழ்விற்கு 1974 ல் வந்தேன். 51 ஆண்டு காலம் ஆகிப்போச்சு. 51 ஆண்டு காலம் மக்களுடைய பிரச்சனையை நாங்கள் அனுபவ ரீதியாக தெரிந்து வைத்திருக்கிறோம். இன்றைக்கு 41 உயிர்களை இழந்து விட்டோம். என்ன நடந்திருக்க வேண்டும். யாருக்காக உயிரிழந்தார்கள். அவரை காண, அவருடைய பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம். விஜய் என்ன பண்ணிருக்க வேண்டும். நேரடியாக அங்கு போயிருக்க வேண்டும். நாங்கெல்லாம் ஓடிப்போய் பார்க்கவில்லையா. நாங்கள் அந்த கட்சி, இந்த கட்சி என்று பார்க்கவில்லை, மதிக்க முடியாத 41 உயிர்கள் போய்விட்டது. பாவம், பரிதாபம் அந்த குடும்பங்கள் எந்த நிலையில் இருக்கும். அவர்களுக்கு எங்களால் முடிந்த ஆறுதல் சொல்லலாம். அந்த ஆறுதல் கூட உங்களால் சொல்ல முடியலையே. கட்சி நடத்தி என்ன செய்யப் போறீங்க.
இதே ஜெயலலிதா இருக்கும்போது சுனாமி வந்தது. அதிகாரிகள் எச்சரிச்சாங்க அதையும் மீறி கடலுக்கு போய் பார்த்தாங்களா இல்லையா? உடனே ஓடோடி பார்த்தாங்களா இல்லையா? புயல் வந்தது என்னுடைய அமைச்சர்கள் எல்லாம் மூணு மாதம் அங்கேயே தங்கி கஜா புயலில் மூன்று மாத காலம் அந்த இடத்திலேயே தங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அந்த புயல் அடிச்சுவடு இல்லாமல் நாங்கள் பார்த்துக்கிட்டோம். இதெல்லாம் எங்களுடைய உழைப்பு. ஒரு அரசாங்கம் எப்படி இருக்கும் என்பதற்கு முன்மாதிரியான அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.
எதையுமே செய்யாமல் திரைப்படத்தில் இருக்கிற வரைக்கும் சம்பாரிச்சீங்க.பல்லாயிரக்கணக்கான கோடியை விட்டுட்டு வந்தேன் என்று சொல்கிறீர்கள்.யாருக்காக விட்டுட்டு வந்தீங்க? அரசியல் இது சாதாரண விஷயம் இல்லை. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிட முடியாது. இது எட்டு கோடி மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/769-2026-01-29-18-11-29.jpg)