பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகாரமோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்து வருகிறார். அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு ராமதாஸ் மீது ஏன் இந்த திடீர் பாசம். வன்னியரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கும் ராமதாஸ் மீது ஏன் இந்த திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸை என்றைக்காவது திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார். ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பதும் என எல்லாமே திமுகவின் சூழ்ச்சி தான்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் ஐயாவாக இல்லை ஒரு குழந்தை போல் மாறிவிட்டார். ராமதாஸ் ஐயாவாக எதை செய்யச் சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். ஆனால் அவர் இப்பொழுது ஒரு குழந்தையை போல் மாறிவிட்டார். எனவே அவரை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். ராமதாஸிற்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என 12 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து இருந்தேன். ராமதாஸ் உடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுயநலத்திற்காக அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனாலேயே பாமக தலைவர் பொறுப்பை ஏற்றேன். 2024 தேர்தலில் தந்தை ராமதாஸ் சொல்லி தான் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போதே ராமதாஸ் சொல்லி இருந்தால் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என ஏன் சொல்லப் போகிறேன்?" என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.