எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? என நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் கட்சியின் அரசியல்,கூட்டணி நிலைப்பாடு குறித்துப்  பேச அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. பொதுவாழ்வில் நாகரிகமாகவும், கண்ணியமாகவும் பேசவேண்டும் என்கிற அடிபடை அரசியல் புரிதல் கூட இல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை பிச்சைக்காரன் என்று தரம் தாழ்ந்த முறையில் விமர்சிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இதற்காக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

Advertisment

எம்.ஜி.ஆர்.ரால் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக இருந்த அதிமுக இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜகவிடம் கையேந்தி நிற்கிறது. இன்றைய சூழலில் அதிமுகவிற்கு உண்மையான முதலாளி பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிமுகவை உடைத்து பலவீனப்படுத்த அனைத்து அஸ்திரங்களையும் வெளிப்படையாகவே பிரயோகிக்கும் பாஜகவை கண்டிக்கக் கூட முடியாமல், அவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?. 

Advertisment

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிடியின்  தலைவராக இருந்தால் அவரை பிச்சைக்காரன் என்று  பேசுவீர்களா?. இது உங்களின் தரம் தாழ்ந்த அரசியலையும், சாதிய வன்மத்தையும், தோல்வி பயத்தையும் தான் காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை. பாஜகவிடம் கூட்டணி சேர்ந்த கட்சிகள் எல்லாம் மண்ணோடு புதைக்கப்பட்டுவிட்டன என்பது தான் வரலாறு. அந்த வரலாற்றை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்திக்க இருக்கிறது. அதை மறைக்கவே எடப்பாடி பழனிசாமி மற்ற கட்சிகள் பற்றியும் தலைவர்கள் பற்றியும், தரம் தாழ்ந்த முறையில் பேசிவருகிறார். தரம் தாழ்ந்த அரசியலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் புரியவைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.