அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியாக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இது குறித்து கடந்த 05ஆம் தேதி (05.09.2025) செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். 10 நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்கத் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார். 

Advertisment

இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இத்தகைய சூழலில் தான் ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாகச் சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியிருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது கடந்த நாட்களாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வர உள்ளார். இதற்காக இன்று (13.09.2025) இரவு 10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படக் கூடிய விமானத்தின் மூலமாக செங்கோட்டையன் சென்னைக்கு வர உள்ளார். இதனையடுத்து நாளை (14.09.2025) மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியினரிடம் மேற்கொண்ட ஆலோசனைகள், அது தொடர்பான கருத்துக்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.