அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமைகள் மீட்பு குழுவை நடத்தி வருகிறார். ஆனாலும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அதிமுகவில் தன்னை இணைத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்து வருகின்றனர். இதனிடையே, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தை மாதத்தில் அறிவிப்பதாக ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்தனர். தன்னுடன் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருவது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. அதிமுகவில் இணையவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணியிலும் அவர் தற்போது வரை இணையவில்லை. அதற்கு பா.ஜ.க எந்தவித சமிக்ஞையும் காட்டவில்லை.

Advertisment

இந்த நிலையில், இன்றுடன் (12-02-26) தை மாதம் முடியவுள்ளது. இம்மாத முடிவுக்குள் அரசியல் நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்த நிலையில் தற்போது வரை எந்தவொரு அறிவிப்பும் அவர் வெளியிடவில்லை. இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கூட அவர் எந்தவித பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

இதனிடையே ஓபிஎஸ் தனது தேர்தல் நிலைப்பாடு குறித்து ஜெயலலிதா பிறந்த நாள் அன்றோ அல்லது தேர்தல் தேதி அறிவிக்கும் சமயத்திலோ தெரிவிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அவரை அதிமுகவில் இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ள நிலையில், அவர் அதிமுகவில் இணைவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைக் கடந்த அதிமுக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூட எடப்பாடி பழனிசாமி உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தனது நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது யாராலும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

Advertisment