தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலைவர்களின் பெயர்களில் இயங்கி வரும் விடுதிகள் இனி 'சமூக நீதி விடுதிகள்' என அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தமிழ் சமுதாயத்தை சமத்துவ சமுதாயமாக கட்டமைத்திட இந்த முயற்சி அடித்தளம் அமைக்கும். சமூக நீதி, சமநீதி, சட்ட நீதி ஆகியவை அனைவருக்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிடம் மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும்' எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'தரம் மாற்றம் தேவையே தவிர பெயர் மாற்றமல்ல' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கான விடுதிகள் இனி, “சமூக நீதி விடுதி” என்று பெயர் மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒரு வகையில் வரவேற்கத் தக்கது என்றாலும், பெயரை மட்டும் மாற்றுவதால் என்ன பயன் விளையப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது?

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சிறுபான்மையினர் நலத் துறை ஆகியவற்றின் கீழ் மொத்தம் 2,739 விடுதிகள் இனி “சமூகநீதி விடுதிகள்” என அழைக்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர், “சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, சமநீதியை வளர்ப்பதற்காக பள்ளி கல்லூரிகளின் அரசு விடுதிகளின் பெயர் சமூக நீதி விடுதிகள் என மாற்றப்படும்” என்று அறிவித்திருக்கிறார். பெயர்களை மட்டும் மாற்றுவதால் பெரிய மாற்றம் ஏதும் நடந்துவிடாது. நீதியரசர் சந்துரு அளித்த அறிக்கையில் பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்கள் இருக்கக்கூடாது என்ற பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.

இதை விட முக்கியமானது, தற்போது பள்ளி, கல்லூரி வளாகங்களில் மிக ஆபத்தான சம்பவங்கள் அவ்வப்போது செய்திகளாக வெளியாகி வருகின்றன. மாணவர்களிடையே மதுப் பழக்கம், போதைப் பழக்கம் அதிகரித்து வருகின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் சமூக நீதியின் ஓர் அடையாளம் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தில் மாணவ மாணவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறும் நோக்கில் படிப்பில் கவனம் செலுத்த போதிய அவகாசம் கிடைப்பதற்காக தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அங்கே மாணவர்கள் கல்வி கற்பதற்கு உரிய வழிவகைகளை அமைத்து அவர்களை முன்னேற்றலாம். இது போன்றவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்துவதே நல்லது. பெயர் மாற்றத்தோடு நின்றுவிட்டால் பலனில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.