தமிழகம் முழுவதும் தனது பிரச்சார பயணத்தை அக்டோபர் 11ம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். இந்த  தேர்தல் பிரச்சார பயணத்தை துவக்கி வைக்க அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்  நாகேந்திரன். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்துவது தொடர்பாக இபிஎஸ்-நயினார் இருவரும் விவாதித்துள்ளனர். இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது "பாமக மற்றும் தேமுதிக தரப்பில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பாகவும் இரண்டு கட்சிகளையும் விரைவாக கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்தும் இபிஎஸ் – நயினார் ஆலோசித்துள்ளனர்.

பிரதான கட்சிகளான  பாமக, தேமுதிக தவிர புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் கூட்டணியில் மறுபடியும் இணைப்பது தொடர்பாகவும் பேசியிருக்கிறார்கள்.

மேலும், நயினார் தொடங்கும் யாத்திரைக்கு அதிமுக தரப்பில் இருந்து முழு ஆதரவு தரப்படும் என  வாக்குறுதி அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மாநில அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது,  ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. விரைவில்,  தமிழக அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கும் என டெல்லியில் இருந்து கிடைத்த உறுதிமொழியை தொடர்ந்து திமுகவிற்கு எதிரான வியூகத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர்.

Advertisment

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. செங்கோட்டையன், ஓபிஎஸ்,சசிகலா, டிடிவி தினகரன் பற்றியும் இருவரும் விவாதிக்கவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.