சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போக்சோ விதிகளை பின்பற்றாத காவல் அதிகாரிகள் மீதான விசாரணை என்ன நிலையில் உள்ளது என்பது பற்றி  தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில்  சிறுமியின் பெற்றோர் புகாரளிக்க அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரை தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

Advertisment

அதேபோல் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் தாய் இழப்பீடு வழங்கக் கோரியும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தை பின்பற்றாமல் தவறிழைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறினார். இதற்கு அதிருப்பதி தெரிவித்த நீதிபதிகள், 'குற்ற வழக்கு பதிவு செய்தது வேறு, துறை ரீதியான நடவடிக்கை கேட்பது வேறு' என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

Advertisment

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது  என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 15 மாதங்கள் கடந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை என்ன நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே போக்சோ விதிமுறைகளை மீறியுள்ளனர். போக்சோ சட்ட நடைமுறைகள் குறித்து போலீசாருக்கு விழிப்புணர்வு இல்லை. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியா என்ன  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை நாளை அரசு தரப்பு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.