தமிழ்நாட்டைப் போலவே, மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 

Advertisment

இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சி.வி.ஆனந்த் போஸுக்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தியால் நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளேன். அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, சில அரசியல் நலன்களுக்காக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து சில அழுத்தங்களுக்கு ஆளாகியிருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

மேற்கு வங்க ஆளுநராக ஆர். என். ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக நிறுவப்பட்ட மரபுப்படி அவர் என்னிடம் ஒருபோதும் கலந்தாலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, மேலும் நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே பாதிக்கின்றன. கூட்டுறவு கூட்டாட்சி கொள்கைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும், மேலும் ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment