தமிழகத்தின் வட மாவட்டங்களில் பிரபலமான மயானக்கொள்ளை திருவிழா, மாசி மாதம் சிவராத்திரியோடு வரும் அமாவாசை நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை விழா இன்று (17.02.2026) சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில்  நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் மறைந்த முன்னோர்களின் கல்லரையில் படையலிட்டு மக்கள் வழிபாடு நடத்தினர். இந்த மயானக்கொளையின் முக்கிய நிகழ்வாக விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அங்காளம்மன், உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயர 3 பல்லக்கில் பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக வந்து மின் விளக்கு அலங்காரத்தில் பாலாற்றில் இறங்கி சூரையாடல் நடைபெற்றது. 

Advertisment

இதேபோல ஓல்டு, டவுன், தோட்டபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் தேர்கள் அணிவகுத்து வந்தன. இதில் அம்மன், காளி, அங்காலன், பரமேஸ்வரி போன்று பல்வேறு சாமி வேடமிட்டு ஊர்வலமாக சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொது மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் சூரையாடல் முடிந்து நள்ளிரவு சுமார் 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி  பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் தேரில் இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை காவல் துறை மற்றும் பொதுமக்கள் மீட்டு படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும் இது குறித்து விசாரிக்குமாறு காவல் துறைக்கும், அடுத்த முறை இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கக்கூடாது என விழா குழுவினருக்கு உத்தரவிட்டார். மேலும் படுகாயம் அடைந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி நேரில் நலம் விசாரித்தார். 

vellore-festival

அதே சமயம் சாய்ந்த தேரில் இருந்த அம்மன் சிலையை மட்டும் மீட்டு கழிஞ்சூர் கிராம மக்கள் ஊருக்கு எடுத்து சென்றனர். அரசு விதிப்படி 12 அடிக்கு மேல் தேர்கள் இருக்கக்கூடாது என விதி இருந்த போதும் மயான கொள்ளை திருவிழாவின் போது விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர் ஆகிய 3 தேர்கள் தலா 60 அடி உள்ளது. இதேபோல் கடந்த 2023ஆம் ஆண்டு மோட்டூர் கிராமத்தின் தேரும் பாலாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Advertisment