Tvk leader Vijay arrested? at Karur stampede incident
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்தபோது தான் குழந்தைகள், பெண்கள் என பலர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 04324 259306, 7010806322 (வாட்ஸ்அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 30 உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்' என தெரிவித்துள்ளார்.