செப்டம்பர் 15 இன்று  திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்த தயாராகி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில்,'தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா  தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அண்ணாவின் 117 வது பிறந்த நாளை ஒட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம்' என்பதை சாராம்சமாக கொண்டு 'நீட் உள்ளிட்ட மாணவர்களை முடக்கும் எந்த ஒரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்; உரிய கல்வி நிதிக்காக போராடுவேன்; தமிழ் மொழி, பண்பாட்டு பெருமைக்கு எதிராக எந்த ஒரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன்; உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன்; வாக்கு திருட்டை எதிர்த்து போராடுவேன்; தமிழகத்தை தலைகுனிய விட மாட்டோம்' என உறுதிமொழி  ஏற்கப்பட்டது.