We will not allow the corrupt DMK regime to continue - Tamilisai interview Photograph: (BJP)
ஊழல் மலிந்திருக்கும் திமுக ஆட்சியை நாங்கள் தொடர விடமாட்டோம்' என பாஜக மூன்று தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''நிச்சயமாக 2026ல் திமுகவின் ஆட்சியை தமிழகத்தில் தொடர விடமாட்டோம். செந்தில் பாலாஜி மிகச் சிறப்பாக மாநாடு ஏற்பாடுகளை செய்திருக்கிறார் என்று முதல்வர் சொல்கிறார். எந்த செந்தில் பாலாஜி? சிறைக்குள் இருக்க வேண்டிய செந்தில் பாலாஜியா? பின்னர் எதற்கு செந்தில்பாலாஜி மீது நீங்கள் வழக்கு தொடர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் கூற முடியுமா?
23 வயது இளைஞனாக இருக்கும் பொழுது நான் அவசர நிலையை எதிர்த்து போராடினேன் என்கிறார் முதல்வர். யார் கொண்டு வந்தது அவசர நிலை? கூடவே வைத்திருக்கிறீர்களே (காங்கிரஸ்) அவர்கள் தானே. அதிமுக பாஜகவிற்கு அடிபணிகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நாங்கள் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம். எந்த அடிப்படையில் காங்கிரசுக்கு நீங்கள் துணை நிற்கிறீர்கள? 23 வயதில் அவசர நிலை வந்த பொழுது அதற்கு எதிராக நின்று போராடினேன் என்று சொல்லுகிறீர்கள் அதைக் கொண்டு வந்த காங்கிரஸ் உடன் இப்பொழுது நிற்கிறீர்கள். காங்கிரசுக்கு நீங்கள் அடிமைப்பட்டு இருக்கிறீர்கள் என்று நான் சொல்ல முடியும்.
அதேபோல் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் நலனை அரசு பாதுகாக்கவில்லை என்றால் நாங்கள் உடனடியாக போராடுவோம் என்று சொல்கிறார்கள். துணிவு இருந்தால் வெளியே வருவோம் என்ற துணிச்சல் சண்முகத்திற்கு இருக்கிறதா? நேற்று திமுக முப்பெரும் விழாவில் நடந்தது அப்பட்டமான பொய் பிரச்சாரம். ஏன் திமுகவை வீழ்த்த முடியாது வீழ்த்த முடியாது என்று சொல்கிறீர்கள். வலிமையான டெங்கு ஜுரம் வந்த மாதிரி வீழ்த்த முடியாது என சொல்கிறீர்கள். வீழ்த்த வேண்டிய காலம் வந்து விட்டது. திமுகவின் மக்கள் விரோத ஆட்சி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் 30 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள். தெலுங்கானாவில் இதேபோல போக்குவரத்து தொழிலாளர்களை அரசாங்க ஊழியர்களாக மாற்றுவதற்கு இந்த கையால் நான் கையெழுத்திட்டேன். திமுக உங்களுக்கு துணிச்சல் இருந்தால் அதைச் செய்யுங்கள்'' என்றார்.