புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பைக் திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் சிசிடிவி கேமராக்களில் சிக்கிய திருடர்களை கூட பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 22 ந் தேதி மதியம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஆனந்த் தனது பெரியப்பா வீட்டு வாசலில் சாலையோரம் தனது பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று அரை மணி நேரத்தில் திரும்பிய வந்தபோது தனது பைக்கை காணவில்லை. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பார்த்த போது லேசான தாடி வைத்த ஒரு இளைஞன் அந்த பைக்கில் கீரமங்கலம் சாலையில் செல்வது தெரிந்தது. இந்த சிசிடிவி பதிவுகளுடன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் கீரமங்கலம் மேற்பனைக்காடு சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் நின்ற பைக்கை இரவு 9.40 மணிக்கு "ஊதா நிற ஆர் 1 5" பைக்கில் வந்த இருவரில் ஒருவன் கீழே இறங்கி கடை வாசலில் கண்காணிப்பு கேமராவிற்கு அருகிலேயே நின்ற பைக்கிள் தான் கொண்டு ஒரு சாவியை போட லாக் ஓபன் ஆனதும் பைக்கை எடுத்துக் கொண்டு யூடர்ன் அடித்துச் செல்கிறான். இந்த இளைஞனும் மேற்பனைக்காட்டில் பைக் திருடிச் சென்ற அதே இளைஞன் தான். கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/23/a4527-2025-07-23-23-29-48.jpg)
கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது அருகில் உள்ளவர்களிடம் விசாரிக்கும் போது ஆர் ஒன்5 பைக்கிள் வந்து நிற்கும் நபர் பற்றிய விபரங்களை கடை வீதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதன் பிறகு விசாரணை முடங்கியது. கண்காணிப்பு கேமராவில் சிக்கியும் கூட போலீசார் தங்களை பிடிக்கவில்லை என்ற துணிச்சலில் அதே காலகட்டத்தில் கொத்தமங்கலம் திருவிழா, கீரமங்கலம், நாகுடி, அரசர்குளம் என பல இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தான் கடந்த வாரம் வரை தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் இதேபோல அடுத்தடுத்து பல பைக்குகள் திருடப்படுவதையடுத்து பேராவூரணி போலீசார் கண்காணிப்பை துரிதப்படுத்தினர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதி வஉசி தெரு தச்சுத் தொழிலாளி முத்துக்குமார் மகன் நாகராஜன் (27), அரசர்குளம் மேல்பாதி மாணிக்கம் குடியிருப்பு பழனிவேல் மகன் அஜித் (25) ஆகிய இருவர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஊதா நிற ஆர்ஒன்5 பைக்கும் சிக்கிய நிலையில் அவர்களிடம் விசாரித்த போது போலீசாரையே கிறுகிறுக்க வைத்துள்ளனர்.
நாகராஜ் தச்சு வேலைக்கு போறது போல தனது ஆர்ஒன்5 பைக்ல போய் தங்கி இருந்து சில இடங்களில் சில நாட்கள் வேலை செய்து கொண்டே பைக்குகளை நோட்டம் விடுவேன். பிறகு ஒரு நாள் நாகராஜின் காஸ்ட்லியான பைக்ல போவோம். குறிப்பிட்ட இடத்தில் என்னை இறக்கி விட்டுட்டு நாகராஜ் அவன் பைக்ல தயாரா நிற்பான். நான் முதலில் திருட வேண்டிய பைக்ல யாரோடது அவங்க என்ன செய்துகிட்டிருக்காங்கனு கொஞ்ச நேரம் பார்த்துட்டு அந்த பைக்ல ஒன்சைடா உட்கார்ந்து என் பாக்கெட்ல வச்சிருக்கும் ஒத்தை சாவியை எடுத்து பைக்ல போடுவேன் லாக் ஓபன் ஆனதும் ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கும் போயிருவேன். நாகராஜ் பின்னாலயே வந்துடுவான்.
எந்த ஊர்ல பைக் எடுத்தாலும் நேராக வடகாடு அருகில் உள்ள மாங்காடு பூச்சிகடை கடைவீதியில் ஒதுக்குப்புறமா உள்ள கேரளாக்காரங்களோட பழைய இரும்புக்கடைக்கு கொண்டு போயிடுவோம். பைக் உள்ளே போனதும் அப்பவே ஒரு மணி நேரத்தில் அக்குவேறு ஆணி வேறா பிரிச்சுடுவோம். அப்புறம் யார் வந்தாலும் பைக்குகளை கண்டுபிடிக்க முடியாது. அப்பவே பணத்தை வாங்கிட்டு போய் சரக்கடிச்சுட்டு நல்லா சாப்டு நல்ல புள்ளையா வீட்டுக்கு போயிடுவோம். ஊருக்குள்ள யாருக்கும் சந்தேகம் வராம நடந்துக்குவோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/23/a4528-2025-07-23-23-30-23.jpg)
நாங்க திருடுறது ரொம்ப புது பைக்ககுகளை திருடுவதில்லை. புது பைக்ன்னா ஈசியா கண்டுபிடிச்சுவாங்க. ஆனால் சில வருடங்கள் ஆன பைக்ல உள்ள லாக் தேய்ந்து இருக்கும் அதில் எங்களோட ஒற்றை சாவி ஈசியா சேர்ந்துடும் உடனே லாக் ஓபன் ஆகிடும் அதனால பழைய பைக்குகளை மட்டும் குறி வைப்போம் என்று சொன்னவர்கள் நாங்க திருடின பைக்குகள் பார்ட் பார்ட்டா உடைச்சு இரும்புக்கடையில அடுக்கி இருக்கு என்று சொல்லி உள்ளனர்.
விசாரணை முடிவில் பைக் திருடர்கள் அரசர்குளம் நாகராஜ், அஜித் ஆகியோரை பேராவூரணி போலீசார் மாங்காடு பூச்சிகடை பழைய இருப்புக்கடைக்கு அழைத்துக் கொண்டு பார்த்த போது இவர்கள் சொன்னது போல நூற்றுக்கணக்கான பைக்குகள் உடைக்கப்பட்டு உதிரிப் பாகங்களாக கிடந்ததைப் பார்த்து அதிர்சியடைந்து தங்கள் காவல்நிலைய பகுதியில் காணாமல் போன 8 பைக்குகளுக்கான பாகங்களை மட்டும் கைப்பற்றிக் கொண்டு பழைய இரும்புக்கடையில் இருந்த கடை ஓனரின் தந்தை கிருஷ்ணன் மகன் உதயனை (50) கைது செய்துள்ளனர். பைக் திருடர்களான அஜித், நாகராஜ், பழைய இரும்புக்கடை உதயன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த தகவல் வேகமாக பரவ பைக்குகளை பறிகொடுத்து தேடிக் கொண்டிருந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் போலீசாரிடம் தஙகள் பைக்குகளையும் மீட்டுத்தர கோரிக்கை வைத்துள்ளனர். பைக் திருடர்களை புதுக்கோட்டை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் காணாமல் போன பைக்குகளை மீட்கலாம்.