மக்களை காப்போம் ; தமிழகத்தை மீட்போம் எனும் முழக்கத்துடன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அதிமுக பொ.செ. எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு மாவட்டத்தில் இன்று பயணப்பட்டார். மொடக்குறிச்சி தொகுதியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் இந்த தொகுதிக்கு எந்த திட்டமும்நிறைவேடவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்புக்கு வந்து 5வது ஆண்டு நடக்கிறது, இந்த மொடக்குறிச்சிக்கு ஏதாவது திட்டம் கொடுத்தாரா? எதுவும் கிடையாது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. சம்பளம் உயர்த்துவோம் என்றனர் அதையும் செய்யவில்லை. தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக 2999 கோடி ரூபாய் பெற்றுக்கொடுத்தது. ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது பாஜகவோடு கூட்டணி வைத்தோமோ அன்றே பயம் வந்துவிட்டது. இது எங்கள், கட்சி நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்..? திமுக, கூட்டணிக் கட்சிகளும் பதறுகின்றன. ஆக பயம் வந்துவிட்டது. எதைப் பேசுவது என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்குதாம், இருக்கட்டும். ஓட்டு போடுவது மக்கள். கூட்டணி ஓட்டுப்போடுவதில்லை. மக்கள் தான் நீதிபதி. மக்கள் விரும்புபவர்களே ஆட்சிக்கு வரமுடியும். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.என்று மக்கள் விரும்புகிறர்கள், எனவே நாங்கள் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.