நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபித்து வெளியே வருவோம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விரிவான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, பொதுநல வழக்கில் வழக்குப்பதிவு செய்யக் கோரியதால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.
மேலும், "முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்ட அமைச்சர், "நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எனவே, உரிய நீதிமன்றத்தை அணுகி, இந்த வழக்கிலும் நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபித்து வெளியே வருவோம்" என்றும் கூறினார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "அமலாக்கத்துறையின் கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடக்கும் நிலையில், தேர்தல் நேரம் என்பதால், திமுக மற்றும் முத்தாலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கை குறைக்கவும், கே.என்.நேருவின் தேர்தல் பணியை முடக்குவதற்காகவும் சதி நடக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.
2016 ஆண்டு, கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அவர், ப.சிதம்பரத்தை கைது செய்து 100 நாள் சிறையில் வைத்தார்கள், 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கு என்னவானது? எனவும் கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத்துறை போட்ட வழக்குகளில் ஒரு சதவீத வழக்குக்கூட நிரூபிக்கப்படவில்லை. இதைவிட கடுமையான வழக்குகளைப் போட்டபோதும், திமுக வெற்றிபெற்று வந்துள்ளது.
கட்சியின் முதன்மை செயலாளர் மட்டுமல்ல, 41 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளராகவும் கே.என்.நேருவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். 41 தொகுதியிலும் வெற்றிபெறும் அளவுக்கு களத்தை சரிசெய்து வைத்துள்ளார் என்ற பொறாமையில், அதிமுகவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பாஜக செயல்படுவதாகவும், தேர்தலில் மிகப்பெரிய அவர்களுக்கு அடி விழும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கே.என்.நேரு மீது நேரடியாக பல வழக்குகள் போடப்பட்டதாகவும், அவற்றை அவர் வென்று காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டதோடு, அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும், வழக்குப் போட்டவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு சட்டரீதியாக இதை அணுகி வெற்றிபெற்று காட்டுவோம் " என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/k-n-nehru-2026-02-20-16-45-28.jpg)