மக்களை காப்போம் ; தமிழகத்தை மீட்போம் எனும் சுற்றுப்பயனத்தில் மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுமலை பிரதான சாலையில் மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
“மடத்துக்குளம் தொகுதிக்கு திமுக ஆட்சியில் எதுவும் கொண்டுவரவில்லை. எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஏழை மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருப்பூரில் 350 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்தோம். தனியார் மருத்துவமனைக்கு நிகராக செயல்படும் வகையில் உருவாக்கிக் கொடுத்தோம்.
கால்நடை வளர்ப்பு இப்பகுதியில் அதிகம், அது விவசாயிகளின் உப தொழில். எனவே கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் 250 கோயில் கொடுத்தோம். வாய் பேசாத ஜீவன்களுக்கும் திட்டம் கொடுத்தோம். விவசாயிகள் செழித்து வாழ வேண்டும் என்பதற்காக திட்டம் கொண்டு வந்தோம்.இப்படி திமுகவில் ஒரு திட்டமாவது சொல்ல முடியுமா?
விவசாயிகளுக்கு நீண்டநாள் பிரச்னை, ஆணைமலையாறு நல்லாறு திட்டம். அதிமுக ஆட்சியில் கேரள மாநிலம் சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். சுமூகமாக நடந்தது, இரண்டு அரசும் உயர்மட்டக் குழு அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டு இரண்டுமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக அரசு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இண்டியா கூட்டணிதான் நாட்டுக்கு நல்லது செய்கிறது என்கிறார் ஸ்டாலின். நீங்கள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இன்னும் 7 மாதம் இருக்கிறது. இப்போதாவது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள், இல்லாவிட்டால் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். அக்கறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்.
அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது ஆணைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.52 மாத திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் எந்தத் திட்டமும் இல்லை. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான். வேறு எந்த அரசும் வறட்சி நிவாரணம் கொடுத்த வரலாறே கிடையாது. அதிமுக அரசு மட்டும்தான் கொடுத்தது.
விவசாயிகள் கோரிக்கை ஏற்று எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். ஆனால் இன்று, ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
பல ஆண்டுகளாக ஏரி குளங்கள் தூர் வாராததால் தண்ணீர் கடலில் கலந்தது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம். அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன, அவற்றில் 6 ஆயிரம் கண்மாய்கள் 1,240 கோடி ரூபாய் செலவில் தூர் வாரினோம், உள்ளாட்சி அமைப்பு சார்பில் 26 ஆயிரம் கண்மாய்கள் தூர் வாரப்பட்டது.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 80 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. வேண்டுமென்றே திட்டமிட்டு இத்திட்டத்தையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். எந்தெந்த பகுதியில் கோரிக்கை வருகிறதோ அவற்றை எல்லாம் பரிசீலித்து தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று அருந்ததியர் மக்கள் கோரிக்கை வைத்தால் பல லட்சம் மதிப்புள்ள வீடுகள் கட்டிக்கொடுப்போம்.
விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு 90% பேருக்குக் கொடுத்தோம்.
மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு சென்றுவர ஏதுவாக அம்மா இரு சக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுத்தோம். இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது.
உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். அதிமுக ஆட்சியின் பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது, அந்த திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் தொடரும்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. வருமானம் குறைவு செலவு அதிகம். ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
தென்னை விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை செய்தோம். கொப்பரை தேங்காய் விலை சரிந்தது, மத்திய அரசிடம் பேசி உயர்த்திக் கொடுத்தோம். தென்னையைக் காப்பாற்றி நல்ல விளைச்சல் பெற வாழ்க்கை ஏற்றம்பெற மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க 100 ஏக்கர் நிலம் கொடுத்தோம். தென்னங்கன்று மானிய விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. தென்னைக்கு தண்ணீர் வேண்டுமென்பதால் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி கொடுத்தோம், திமுக அரசு அனுமதியை ரத்துசெய்துவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆராய்ச்சி நிலையத்திற்கு தண்ணீர் கொடுகப்படும். வாடல் நோயில் இருந்து தென்னையைக் காப்பாற்றி நல்ல வருமானம் கிடைக்க உதவி செய்யப்படும். தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிக்க அதிமுக ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டது.
கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் மானியம் கொடுத்தோம். பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம். கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை 2019ல் அறிவித்தோம், இரண்டாண்டுக்கு ஒருமுறை கோவை கொடீசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி ஏற்படுத்தி நெசவாளர்கள் சிறக்க நடவடிக்கை எடுத்தோம்.
அதிமுக ஆட்சியில் மடக்குளம் தொகுதியில் ஆணைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும், திருமூர்த்தி, அமராவதி அணையில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதியளித்து, ஆழப்படுத்தப்பட்டது, மீண்டும் அதிமுக அமைந்ததும், வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்படும். மடத்துக்குளம் ஊராட்சி பேரூராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு பழைய குழாய்கள் மாற்றப்பட்டு தடையில்லா குடிநீர் வழங்கினோம்.
மடத்துக்குளம் தாலுகாவில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் அமைத்தோம். புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைத்தோம், புதிய காவல் நிலையம் அமைத்தோம், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்குவழிச்சாலை 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றினோம். இத்தொகுதி எம்.எல்.ஏ மகேந்திரன் எம்பியாக இருக்கும்போது சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசி அற்புதமான சாலை அமைக்கப்பட்டது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சரிசெய்யவேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். மூன்றாண்டுகளாக மூடிக்கிடக்கிறது, இக்கோரிக்கை நிறைவேற்றப்படும். அமராவதி அணையை சுற்றுத்தலமாக்கவும்,திருமூர்த்தி அணையில் நிறுத்தப்பட்ட படகு சவாரி ஆரம்பிக்கவும், பொழுபோக்கு பூங்காவும் கேட்டிருக்கிறீர்கள், இதுவும் செயல்படுத்தப்படும். தக்காளி அதிகமாக விளைச்சல் இருப்பதால் சாஸ் தயாரிக்கும் ஆலை கேட்டிருக்கிறீர்கள், அதுவும் பரிசீலிக்கப்படும். காய்கறி குளிர்பதன கிடங்கு கேட்டிருக்கிறீர்கள் அதுவும் அமைத்துக்கொடுப்போம். அமராவதி அணைக்கு மேல் புதிய அப்பர் அமராவதி அணை வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள், அதுவும் நிறைவேற்றப்படும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக 2999 கோடி ரூபாய் பெற்றுக்கொடுத்து" என்று அதிமுக ஆட்சியில் என்ன செய்தோம், ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் வாக்குறுதி போல அள்ளி வீசினார் எடப்பாடி பழனிச்சாமி !