Advertisment

'திமுகவிற்கு கருப்பு கொடி காட்டினால் சந்தோசப்படுவோம்; கருப்பிலிருந்து வந்தவர்கள் தான் நாங்கள்!' -கனிமொழி  பேச்சு

5913

dmk Photograph: (kanimozhi)

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வருகின்ற 29-ஆம் தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' எனும் தலைப்பில் திமுக மகளிர் மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கான திடலை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

முன்னதாக, பல்லடத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்'  தி.மு.க மகளிர் மாநாடு - 2025 மேற்கு மண்டல மாநாடு குறித்து திருப்பூர் மாவட்ட மாநகர, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் - மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி, "மாநாட்டிற்கு வருகை தரும் பெண்களின் பாதுகாப்பையும், எந்தவித சிரமமும் இன்றி மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையிலும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம். மாவட்ட கழகச் செயலாளர்கள், அனைத்து மண்டலப் பொறுப்பாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து, இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதுடன், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், பெண்களின் எதிர்காலம் வளம் மிக்கதாகவும் சிறப்பானதாகவும் அமைய வேண்டும் என்றும் முனைப்புடன் முதலமைச்சர் நினைக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கிறது. குறிப்பாக, மாநாட்டிற்காக தனியாக கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழக மாநாடு என்றாலே அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்வாகவே நடைபெற்று வந்துள்ளது.

எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய கட்டுப்பாட்டை சரிவரக் கடைப்பிடித்து தான் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். எல்லோருக்கும் என்னென்ன விதிகள் பொருந்துமோ, அத்தனை விதிகளும் திமுகவுக்கும் பொருந்தும். அதை கழக நிர்வாகிகள் கடைபிடிப்பார்கள்.

எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாக, பின்தங்கி இருந்த ஒரு சூழலிலேயே தமிழ்நாட்டை அதிமுக விட்டு சென்றது. இன்று இந்தியாவிலேயே முன்னேறிய வளர்ச்சி பாதையில் இருக்கும் முக்கியமான மாநிலமாக நம்முடைய முதலமைச்சர் தமிழ்நாட்டை மாற்றி வைத்துள்ளார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், உண்மை என்ன என்பது மனசாட்சிக்கு தெரியும்.

மாநில சுயாட்சி  மற்றும் மாநில உரிமைகளுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்கும். திமுகவிடம் இருந்து முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பார்.

நிறைய மது கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. மேலும் அவற்றை குறைப்பதற்காக நிச்சயமாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மற்றவர்களுக்கு கருப்பு கொடி காட்டினால் அவர்கள் வருத்தப்படுவார்கள்; ஆனால் திமுகவிற்கு கருப்பு கொடி காட்டினால் சந்தோசப்படுவோம்.  கருப்பிலிருந்து வந்தவர்கள் தான் நாங்கள் " என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்,  அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேற்கு மண்டல பொறுப்பாளர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், திமுக மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, திமுக மகளிரணி இணைச்செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக மகளிர் அணி மாநில & மாவட்ட அணியினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

dmk kanimozhi tirupur Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe