பாமக உட்கட்சி பிரச்சனைகளால் இரு பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது. இந்த நிலையில், கட்சி தொண்டர்களில் ஒரு பிரிவு அன்புமணி தரப்பிலும் மற்றொரு பிரிவு ராமதாஸ் தரப்பிலும் அணிவகுத்து நிற்கின்றனர். இதில், அன்புமணி (பாமக) அதிமுக வுடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார். ஆனால், ராமதாஸ் தரப்பு எந்த கூட்டணிக்குச் செல்வது என காய் நகர்த்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், சமீபத்தில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. 

Advertisment

இது குறித்து, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சமயத்தில், விசிக தரப்பு இந்த தகவலை அறிந்து கொந்தளித்துவிட்டது. விசிக நிர்வாகிகள், திமுக கூட்டணியில் பாமக (ராமதாஸ்) பங்கேற்றால் நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் எனத் தெரிவித்தனர். இதனால், பாமக திமுக கூட்டணியில் இணையுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து திமுக தரப்பில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. பாமக (ராமதாஸ்) வந்தால் விசிக கூட்டணியிலிருந்து வெளியேறும் அல்லது சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் பாமக கூட்டணிக்கு தேவை இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

Advertisment

இதற்கான காரணங்களாக, "விசிக நீண்ட காலமாக நம்முடன் கூட்டணியில் உள்ளது. அந்த கட்சி நம்முடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறது. நம்முடன் பல சமயங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும் வேறு கூட்டணிக்கு செல்லாமல் நம்முடன் இருந்து வருகிறது. அது போக கொள்கை அளவிலும் நம்முடன் ஒத்துப்போகும் கட்சியாக விசிக தான் உள்ளது. எனவே விசிக கூட்டணி தான் நமக்கு முக்கியம். அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் எந்த கட்சியும் நமது கூட்டணிக்கு வேண்டாம்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த தகவலை அறிந்து பாமக (ராமதாஸ்) தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனால்  ஆத்திரமடைந்த ராமதாஸ் திமுக அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், "இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கெடுப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக அரசு ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தை கணக்கிடும் முறையை மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதிலிருந்து பாமக ராமதாஸ் திமுக கூட்டணியில் இடம் வாய்ப்பில்லை என்பது வெளிப்படையாக தெரியவருகிறது.

Advertisment