பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகாரமோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சேலத்தில் பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இதே சேலத்தில் 2016 ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்தோம். அப்பொழுது ராமதாஸ் வெள்ளி பேனா வாங்கிக் கொண்டு வாருங்கள் என சொன்னார். நாங்கள் ஓடிப்போய் வாங்கிக் கொண்டு வந்தோம். அவ்வளவு அன்பு பாசம். மகிழ்ச்சியோடு அன்றைக்கு உங்களை (அன்புமணியயை) முதல்வர் வேட்பாளராக ராமதாஸ் அறிவித்தார். ராமதாஸ் எப்பொழுது சொல்கிறாரோ அப்பொழுதுதான் நீங்கள் பாமகவின் அடுத்த தலைவர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ராமதாஸ் 'தான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் தலைவர்' என்று சொல்கிறாரே. அது அவருடைய உரிமை. ஆனாலும்கூட நாங்கள் சொல்வது என்னவென்றால் ராமதாஸிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நான் பாமக இளைஞரணி சங்கத் தலைவராக இருந்த பொழுது மறைந்த அறிவுச்செல்வன் உடன் கவர்னர் மாளிகை முன்பு ஒரு போராட்டத்திற்காக பத்தாயிரம் பேர் இளைஞர்கள் திரண்டோம். கிண்டியிலிருந்து கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை இடுவதற்காக போனோம். அப்பொழுது அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு வரவில்லை. அன்புமணி ராமதாஸை நாங்கள் வலுக்கட்டாயமாக கூப்பிட்டு ஓபன் ஜீப்பில் ஏற்றினோம். அப்பொழுது திரும்பிப் பார்த்த ராமதாஸ் நெருப்பு மாதிரி எங்களை எரித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் உன்னை கட்சியை விட்டு நீக்கிவிடுவேன் நாய்களா, நான் சத்தியம் பண்ணிவிட்டு அரசியல் செய்கிறேன். இப்படி பண்ணுகிறீர்களே என்று கடுமையாக திட்டினார்.

அதன்பிறகு அன்புமணி ஜீப்பில் இருந்து இறங்கி விட்டார். அப்படி இருந்தவரை ஜி.கே.மணி போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள் கட்சியினுடைய தொண்டர்கள் என அனைவரும் சேர்ந்து இந்த சமுதாயத்தையும், இந்த மக்களையும் வழிநடத்த ஒரு தலைவர் வேண்டும் என அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுங்கள் என ரத்த கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். ரத்த கையெழுத்து போட்டதற்கான நகல் எங்களிடம் இருக்கிறது. எங்களை கொலைகாரன், கொள்ளைக்காரன் இலந்தை பழம் விற்பவர்கள் என்று சொல்கிறாரே அன்புமணி ராமதாஸ்.

Advertisment

அன்புமணி ராமதாஸ் உடன் 27 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன். என்னுடைய கார்  மைக் செட் கட்டிக் கொண்டு முதலில் போகும். அன்புமணி ராமதாஸ் பின்னால் வரும் காரில் வருவார். 'வருகிறார்... வருகிறார்.. ராமதாஸின் மகன் வருகிறார்' என ஒவ்வொரு இடத்திற்கும் கூட்டிச் செல்வோம். அவர் நல்லவர் ஆனால் சிலருடைய பேச்சைக் கேட்டு இப்படி நடந்து கொள்கிறார். அன்புமணி தான் கட்சி அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ராமதாஸ் சொல்லவேண்டும் அவர்தான் தலைவர் என்று. அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள்'' என்றார்.