சென்னை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இங்கு மனசாட்சி உள்ளவர்கள் அத்தனை பேரும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஒரு உயர்ந்த பதவியில் தமிழனை உட்கார வைக்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சிக்கு ஏற்றவாறு வாக்களித்து தமிழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி. தொடர்ந்து சில மாதங்களாகவே வெற்றிக் கூட்டணியாக மக்களுடைய நம்பிக்கையை பெற்று, இன்று இந்த கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலே திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாக இருக்கப் போகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம் தான் இருக்கிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் சென்ற வெளிநாட்டு பயணங்களுக்கு இன்னும் வெள்ளை அறிக்கை இல்லை என்பது பல கட்சிகளுடைய கருத்து. ஆறு மாத காலங்களில் தேர்தல் வர இருக்கும் பொழுது இந்த சுற்றுப்பயணம் பயன் தருமா? தராதா? என்றால் என்பது கேள்விக்குறிதான். பயன் தராததற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே என்னுடைய கருத்தாக இருக்கிறது'' என்றார்.