தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் ‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியின் சார்பில் ஏழைகளின் குறைகளை கேட்பதும் தமிழக அரசின் திட்டங்கள் ஏழைகளை சேர்ந்திருக்கிறதா என்பதை கேட்டு அறிந்து புதிய உறுப்பினர்களை தி.மு.கவில் சேர்க்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

'பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது அரசியலமை சட்டத்துக்கு விரோதமானது' என  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், 'கட்சியின் உறுப்பினர் விவரங்களை சேகரித்ததில் தவறில்லை. ஆனால், அந்த விவரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? இது மிகவும் ஆபத்தானது. எனவே 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் ஓடிபியை பெறக் கூடாது’  என நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 'எதிரிகளின் பயமே நமது வெற்றி' என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுகவின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள்  முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்க தொடங்கினர்.

தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுகவினருமே கூட முதலமைச்சர் பின்னால் அணிதிரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால், நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி. நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுகவிற்கு மாண்பமை நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது. மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி கழக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Advertisment

கழக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜகவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!  

திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொதுமக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் OTP பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றான நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுங்கள். எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026 லும் மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களது தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி' என தெரிவித்துள்ளார்.