குருவை சாகுபடிக்கு இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு, போதிய அளவுக்கு மழைப்பொழிவு இருந்ததன் காரணமாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1.99 லட்சம் ஏக்கர் குருவைச் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் தொடர்ந்து அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தான் விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இருப்பினும் ஒரே நேரத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதாலும், அதிக அளவு நெல்மணிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாலும் நெல் கொள்முதல் செய்யும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் நெல்லை, கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல முடியாமல் சாலையில் ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர். அதே சமயம் தேவையான சாக்கு, போதிய அளவு இடவசதிகளை அரசு ஏற்படுத்தித் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள், கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன.
மற்றொரு புறம் டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அறுவடைப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட நெல்மணிகளையும் விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அதோடு நெடுஞ்சாலையிலும், தனியார் இடங்களிலும் நெல்மணிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் நெல்மணிகள் அனைத்தையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தஞ்சை- மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கினறன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக கடந்த வாரம் உணவுத்ததுறை அமைச்சர் சக்கரபாணி தஞ்சையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்மணிகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.