சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் மீண்டும் திமுகவை மறைமுகமாகச் சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், “ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானம் வாசிக்கப்படும் போது மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்தில் இல்லை. இந்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின்னரே மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us