சமீபத்தில் சைவம் வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடியை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டு இருந்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் புகார் அளித்திருந்த நிலையில், இந்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் புகாரில் முகாந்திரம் இல்லை எனக் வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களில் ஒருவரான பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.எஸ்.மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 'முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கொடுக்கப்பட்ட புகார் மீது முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.
உரிய முறையில் விசாரிக்காமலேயே வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். எனவே பொன்முடி மீதான இந்த புகாரை சிறப்பு விசாரணைக் குழு அல்லது சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்றம் செய்து விசாரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். நீதிபதி சதீஷ்குமார் முன்பு இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.