Advertisment

'ரூ.1500 கோடி ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்!'-அன்புமணி வலியுறுத்தல்

283

'We need a CBI investigation into the Rs. 1500 crore corruption complaint!' - Anbumani insists Photograph: (pmk)

'திமுக ஆட்சியில் 1000 புதிய மனமகிழ் மன்றங்கள்; ரூ.1500 கோடி ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்!' என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சாண் ஏறி முழம் சறுக்குவதைப் போல, மது விலக்கை ஏற்படுத்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆர்ப்பாட்டமாக 500 மதுக்கடைகளை மட்டுமே மூடிய நிலையில், ஓசையின்றி 1000 புதிய மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் அளித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டை கஞ்சா, மது போதையில் திளைக்கும் மாநிலமாக மாற்றும் நோக்குடன் மது விற்கும் மனமகிழ் மன்றங்களை மழைக்கால காளான்களைப் போல திமுக அரசு திறந்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
Advertisment
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களின்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் மட்டும் 727 மனமகிழ்மன்றங்கள் செயல்பட்டு வருவதாக தெரியவந்திருக்கிறது. சென்னையில் 117, திருப்பூர் மாவட்டத்தில் 86, மதுரை மாவட்டத்தில் 82, கோவை மாவட்டத்தில் 74, விருதுநகர் 72, தேனி 43, கன்னியாகுமரி 32, திண்டுக்கல் 25, திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தலா 22 என 10 மாவட்டங்களில் மட்டும் 575 மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 20 மாவட்டங்களில் இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள் குறித்த விவரங்கள் மட்டும் தான் இதுவரை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டிருப்பதாகவும், ஒட்டுமொத்த தமிழகத்திலும் இயங்கி வரும் மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கை 1200&க்கும் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப் படுகிறது. 2010&ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் 82 மனமகிழ் மன்றங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன; 2010&2021 காலத்தில் இந்த எண்ணிக்கை 198 ஆக உயர்ந்ததாகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும் 1000&க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வழங்க சில ஆண்டுகளுக்கு முன் ரூ.60 லட்சம் வரை கையூட்டாக வசூலித்த ஆட்சியாளர்கள், இப்போது ரூ.2 கோடி வரை வசூலிப்பதாகவும், அதன் மூலம் மட்டும் ரூ.1500 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் வியப்பளிக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே மனமகிழ்மன்றங்களைத் திறக்க உரிமம் வழங்கி வருவதாகவும், இது மதுவிலக்குக் கொள்கைக்கு எதிரானது என்றும் குற்றஞ்சாட்டி வருகிறேன். இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது எனது குற்றச்சாட்டுகள் உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்திருப்பதை டாஸ்மாக் மது வணிகம் குறித்த புள்ளிவிவரங்களும் உறுதி செய்துள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல், போகி ஆகிய இரு நாள்களில் மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையானது. இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை  என்னவென்றால், மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது என்பது தான். இது மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.435.41 கோடி மதுவுடன் ஒப்பிடும் போது 19% ஆகும். திமுக ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 500 மதுக்கடைகளை, அதாவது 9% மதுக்கடைகளை மூடிய திமுக அரசு, 19%  கூடுதலாக மது வணிகம் செய்யும் அளவுக்கு மனமகிழ் மன்றங்களைத்  திறந்து மதுவை விற்பனை செய்திருக்கிறது.  தமிழ்நாட்டில் இப்போது  4787 அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், சராசரியாக  908 மதுக்கடைகளில் விற்பனையாகும் அளவுக்கான மது மனமகிழ் மன்றங்களில் விற்பனையாகிருப்பதை இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் 1000-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் செயல்படுவதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
மனமகிழ் மன்றங்கள் எனப்படுபவை பொழுதுபோக்குக்கான இடங்கள். அங்கு பொழுது போக்குக்கான  வசதிகளுடன் மதுவும் வழங்கப்படலாம். உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் மது வணிகம் செய்யப்பட வேண்டும்; சில்லறையில் மட்டும் தான் மதுவணிகம் செய்யப்பட வேண்டும்; முழு பாட்டிலாக மது வணிகம் செய்யக்கூடாது எனபன உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மனமகிழ்மன்றங்களில் இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. மனமகிழ் மன்றங்கள் எனப்படுபவை தனியார் மதுக்கடைகளாகவே மாற்றப்பட்டு விட்டன. ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்படும் கையூட்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரி போன்றவற்றை சமாளிக்க அனைத்து வகையான சட்டவிரோத செயல்களும் அங்கு அரங்கேற்றப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டால், மனமகிழ் மன்றங்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் அதை திமுக அரசு மதிக்கவில்லை. கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு மிக அருகில் கூட மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வரும் போதிலும், அவற்றை அகற்றவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது அநீதியாகும்.
மனமகிழ் மன்றங்களுக்கு அளவில்லாமல் உரிமம் வழங்குவதன் மூலம் இரு பெரும் தீமைகளை திமுக அரசு செய்து வருகிறது. முதலாவதாக, படிப்படியாக மது விலக்கு என்ற கொள்கைக்கு மாறாக மது வணிகம் அதிகரிப்பதற்கும், அதன் மூலம் குடும்பங்களின் சீரழிவு, சட்டம் & ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் திமுக வகை செய்திருக்கிறது. இரண்டாவதாக, ஆட்சி அதிகாரத்தின் கடைசி நிமிடம் வரை கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனில் திளைக்கத் துடிக்கிறது. இவற்றை சகித்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மனமகிழ் மன்றங்களையும் உடனடியாக மூட வேண்டும். மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் அளிப்பதற்காக ரூ.1500 கோடி வரை கையூட்டாக வசூலிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
anbumaniramadas dmk pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe