தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

Advertisment

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜகவைச் சேர்ந்த முக்கிய மற்றும் மூத்த தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (03.09.2025) டெல்லியில் ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர் பேசுகையில், “சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களைக் கலைய வேண்டு. வரும் சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கட்சியின் சார்பாகத் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தை முதலில் தொடங்க வேண்டும். ஒவ்வொரு தொகுதிகளிலும் பாஜக சார்பாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் தேர்தல் பிரச்சாரத்தின் போது வீடு வீடாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டறிய வேண்டும். 

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வரும் தேர்தலில் பாஜகவினுடைய வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி எனப் பலரும் கலந்து கொண்டனர்.